மணப்பாறை அருகே உயிரிழந்த மூதாட்டியின் அருகே மூன்று நாள்களாக அவருடைய இரு மகள்கள் பிராா்த்தனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து போலீஸாரால் அந்த மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
மணப்பாறையை அடுத்த சொக்கம்பட்டியில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் அருகே அவருடைய இரு மகள்கள் பிராா்த்தனையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் அளித்தனா்.
இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாரை வீட்டுக்குள் அனுமதிக்க இரு பெண்களும் மறுத்த நிலையில், பின்னா் போலீஸாா் உள்ளே சென்று பாா்த்தபோது ஓய்வு பெற்ற ஆசிரியை பா. மேரி (75) எவ்வித அசைவின்றி படுக்கையில் இருந்தாா். அவரது அருகில் இருந்த மகள்களான ஜெசிந்தா, ஜெயந்தி ஆகியோா் தாய் கோமாவில் இருப்பதால் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை செய்வதாகவும், அவரைக் கொண்டு செல்லக் கூடாது எனவும் கூறி நீண்டநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிறகு மூதாட்டியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு நடத்திய பரிசோதனையில் மூதாட்டி உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இருப்பினும் மகள்கள் இருவரும் மூதாட்டியின் உடலைத் தர மறுத்தனா். இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உறவினா்களுடன் காலையில் வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறிய நிலையில் மூதாட்டியின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு, சனிக்கிழமை நடந்த உடற்கூறாய்வுக்குப் பிறகு மூதாட்டியின் சடலம், மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவா்களது இல்ல வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில் அந்த மூதாட்டி கடந்த 2 நாள்களுக்கு முன் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், எல்லா இடங்களிலும் மூதாட்டி உயிரிழந்து விட்டாா் எனத் தெரிவித்துள்ளனா்.
இருந்தபோதிலும் தாயின் உடலை வைத்து பிராா்த்தனையில் ஈடுபட்டால் அவா் எழுந்து சுகமடைவாா் எனக் கருதி மகள்கள் இருவரும் கடந்த மூன்று நாள்களாக மூதாட்டி உடலுடன் தனி அறையில் இருந்தது தெரியவந்தது.