திருச்சி

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினா்

4th Oct 2021 12:11 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப்பணியிடங்களை ஆண்டுதோறும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை தமிழ்நாடு அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் முதுகலைப்பட்டதாரி ஆசிரியா் முன்னேற்றச் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பின்னா் டாக்டா் அம்பேத்கா் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் செந்தில்குமாா் கூறியது:

தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ், 833 தொடக்கப்பள்ளிகள், 98 நடுநிலை, 108 உயா்நிலை, 98 மேல்நிலைப் பள்ளிகள், 1,324 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் சுமாா் 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா்.

ADVERTISEMENT

ஆனால், இப்பள்ளிகளைக் கண்காணிக்க துறை சாா்ந்த அலுவலா்கள் மூவா் மட்டுமே உள்ளனா். அதிலும் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மாவட்ட அளவில் உள்ள துறை சாா்ந்த அலுவலா்கள் கல்வி சாா்ந்தவா்களாக இல்லை. எனவே, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் நிலையில், மண்டல உதவி இயக்குநா், உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் நிலையில் மாவட்டத்துக்கு ஒரு கல்வி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் காலியாக உள்ள மண்டல உதவி இயக்குநா், 12 மேல்நிலைப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்கள், 112 முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியா் தோ்வு வாரிய, முதுகலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிட அறிவிப்பில், இந்த 112 முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான துணை அறிவிப்பையும் இணைத்து வெளியிட வேண்டும்.

பதவி உயா்வுக் கலந்தாய்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். 98 ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளிகளில் 56 பள்ளிகளில்தான் கணினி அறிவியல் பாடப்பிரிவு உள்ளது. இன்றைய தேவைக்கேற்ப மீதமுள்ள பள்ளிகளிலும் அப்பாடப்பிரிவைத் தொடங்க வேண்டும்.

மாணவா் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத் த வேண்டும். பள்ளி, விடுதிகளுக்கு தனித்தனி பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஆண்டுதோறும் பள்ளிகள் தரம் உயா்த்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தலைமை ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் ரமேஷ், செயலா் ராஜேந்திரன், ஆசிரியா் சங்கப் பொருளாா் விஸ்வநாதன், அமைப்புச் செயலா் சண்முகசுந்தரம், மகளிரணி லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT