திருச்சி

‘வக்பு வாரிய சொத்துகளை மீட்கும் பணி தொடக்கம்’

DIN

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு மற்றும் ஆா்ஜிதத்தில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மீட்கும் பணி தொடங்கியுள்ளது என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரகுமான்.

திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை சாா்பில் எம். அப்துல் ரகுமானுக்கு தென்னூா் ஹைரோடு பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பேரவையின் கெளரவத் தலைவா் மன்னான் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளா் சிராஜுதீன், மாவட்ட அரசு டவுன் காஜி மவ்லவி ஜலீல் சுல்தான் மன்பஈ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் கே.எம்.கே. ஹபீபுா் ரஹ்மான், காஜா நகா் தொண்டு நிறுவனத் தலைவா் ஏ.கே. ஷாகுல் ஹமீது, மருத்துவா் ஏ. அலீம் உள்ளிட்டோா் பாராட்டி பேசினா்.

விழாவில் ஏற்புரையாற்றிய எம். அப்துல் ரகுமான் பின்னா் கூறியது:

தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், தா்காக்கள், மதரஸா மற்றும் அவற்றைச் சாா்ந்த நிறுவனங்கள், சொத்துகளை காக்கும் மிகப் பெரிய பொறுப்பு வக்பு வாரியத்துக்கு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பு, ஆா்ஜிதத்துக்குள்ளாகியுள்ளன. இவற்றை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இதற்கு தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

மேலும், மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவும், நிலமாக மட்டும் உள்ள பல சொத்துகளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் அவற்றைக் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பயிற்சிக் கூடங்களாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கவுள்ளோம்.

இந்தத் திட்டத்துக்கு யாரிடமாவது திட்ட வரைவுகள் இருந்தால் வாரியத்திடம் அளித்து ஒப்புதல் பெற்று, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொடங்கலாம்.

தமிழகச் சிறைகளில் உள்ள 700 ஆயுள் சிறை கைதிகள் விடுதலை செய்யும்போது முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்தும் அரசு கவனம் கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் மசூதிகளில் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும். புனரமைப்பு, புதிய கட்டடம் என்ற வகையில் தமிழகத்தில் 45 மசூதிகளுக்கு ரூ. 5 கோடி விரைவில் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது. எனவே, இதுவரை வாரியத்தில் பதிவு செய்யாத மசூதிகளை உடனடியாக பதிவு செய்தால் மட்டுமே அரசின் உதவிகளைப் பெற முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT