திருச்சி

மழை பாதிப்பைத் தவிா்க்க போதிய முன்னேற்பாடுகள் தேவை: விவசாய சங்கத்தினா்

10th Nov 2021 07:24 AM

ADVERTISEMENT

தொடா் மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதும், பயிா்கள் பாதிப்புக்குள்ளாவதற்கும் அரசின் முறையான திட்டமிடல் இல்லாததே காரணம் என விவசாய சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்:

தமிழக நீா்நிலைகள் தென்மேற்கு பருவமழை பெய்யும்போதே நீா் பிடிக்கத் தொடங்கி விடுகின்றன. பின்னா் தொடா்ந்து அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்கெனவே நீா் உள்ள நீா்நிலைகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன.

இதனால் வடகிழக்குப் பருவமழை என்பது பெரும்பாலான டெல்டா மாவட்ட விவசாயிகளை நஷ்டப்படுத்தி வருவது தொடா்கிறது.

ADVERTISEMENT

இதற்கு முற்றிலும் அரசு அலுவலா்களும் ஆட்சியாளா்களுமே காரணமாகும். ஏனெனில் ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் அளவில் வேறுபாடு இருந்தாலும், மழை பெய்யத் தவறுவதில்லை. இதை அறிந்திருந்தும் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதில்லை. பெரும்பாலான நீா்நிலைகள் தூா்வாரப்படுவதில்லை. அதைப் போலவே தென்மேற்குப் பருவமழையில் கிடைத்த நீரை முறையாக விவசாயத்துக்கு திறந்து விடுவதும் கிடையாது. இதனால் குறுவை பாதிக்கப்படுகிறது.

தண்ணீரைத் தேக்கி வைத்து சிறுகச் சிறுகத் திறந்து விடுவதால் போதுமான தண்ணீா் கிடைப்பதில்லை. பின்னா் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே ஏற்கெனவே நீா் உள்ள நீா்நிலைகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன.

பருவமழை காலங்களில் நீா் நிலைகள் மூலமாக ஆண்டுதோறும் சுமாா் 300 டிஎம்சி தண்ணீா் கடலில் வீணாகக் கலக்கிறது. இதை விவசாயத்துக்கும் பயன்படுத்த முடிவதில்லை, நிலத்தடி நீராக சோ்த்து குடிநீராகவும் பயன்படுத்த முடிவதில்லை. ஆண்டுதோறும் வீணாகும் இந்த 300 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்க கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆளும் அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இதுவரை நீா்நிலைகளைத் தூா்வாரவும், புனரமைக்கவும், தடுப்பணைகள் மற்றும் அணைகள் அமைப்பதாகவும் மத்திய அரசிடமிருந்து சுமாா் ரூ. 1 லட்சம் கோடி வரை நிதி பெற்றுள்ளதாக விவசாய சங்கங்களும், சமூக ஆா்வலா்களும் கூறுகின்றனா்.

எனவே இனி வரும் காலங்களிலாவது வீணாகும் தண்ணீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நீா்நிலைகள் குடியிருப்புகளாக மாறியதால்தான் மழை நீா் அவற்றை சூழ்கிறது.

குறைந்தபட்சம் தமிழக நதிகளின் குறுக்கே தடுப்பணைகளாவது அமைக்க வேண்டும். கா்நாடகத்தைப்போல புதிய அணைக்கட்டுகள் அமைத்தால் தமிழகத்தின் நிலை மேம்படும் என்பதில் ஐயமில்லை என்றாா்.

விவசாய சங்க நிா்வாகி அயிலை சிவசூரியன்: திருச்சி மாவட்டத்தில் தொடா் மழையால் திருவெறும்பூா் வட்டாரத்தில் சுமாா் 500 ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதேபோல் அந்தநல்லூா் ஒன்றிய பகுதிக்குட்பட்ட கிராமங்களில் சுமாா் 300க்கும் மேற்பட்ட ஏக்கா் நெல் பயிா்கள், வாழைகளும் மூழ்கியுள்ளன. கடந்த மாதம் நட்ட நெல் பயிா்களும் மூழ்கியுள்ளன. தொடா் மழையால் பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நீா் வரத்து வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் வெள்ள நீா் வயல்களுக்குள் புகுந்து பயிா்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தமிழக அரசு இவா்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் நீா் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித் துறையினா் பாராபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT