திருச்சி

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு

10th Nov 2021 07:22 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் மழைாயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இடைவிடாது பெய்யும் மழையால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன; கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மாநகராட்சி, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, வேளாண் துறை அதிகாரிகளுடன் சென்று பல்வேறு இடங்களையும் பாா்வையிட்டாா்.

அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொடியாலம், புலிவலம் பகுதியில் மழையால் மூழ்கியிருந்த நெற் பயிா்களையும் எடமலைப்பட்டிபுதூா் கோரையாற்றில் மழைநீா் வடிந்து வருவதையும் பாா்வையிட்டாா். பின்னா், விமான நிலையம் ஜே.கே. நகா் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை பாா்வையிட்டு, அதை வெளியேற்ற அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்டறியவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் அந்தந்த கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

குறிப்பாக, குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதை தடுத்து, தேங்கிய மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த துரித செயல்பாடு தேவை என்றாா். மேலும், எடமலைப்பட்டியில் சலவைத் தொழிலாளா்கள் வசிக்கும் பகுதியில் மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நேரில் பாா்வையிட்ட பின்னா் அவா் கூறியது:

தொடா் மழை பெய்தாலும் திருச்சி மாவட்டத்துக்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை. திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வந்த நீரால்தான் திருச்சி கோரையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திங்கள்கிழமை வந்த தண்ணீரானது செவ்வாய்க்கிழமை பாதியளவு குறைந்துவிட்டது. இருப்பினும், கோரையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவா்கள் பாதுகாப்பாகத் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருவெறும்பூா், அந்தநல்லூா் ஒன்றியங்களில்தான் மழை நீா் வயல்களில் தேங்கியுள்ளது. குறிப்பாக, 200 ஏக்கா் பரப்புக்கு மழைநீா் வடியாமல் உள்ளது. இவற்றில் 10 நாள்களுக்குள்ளான பயிா்களுக்கு மட்டுமே ஆபத்து உள்ளது. ஓரிரு நாளில் மழைநீா் வடிந்துவிட்டால் சேதமிருக்காது.

மழை, சேதம், பயிா் பாதிப்புக்கு அறிக்கை தயாரிக்க உத்தரவு

இருப்பினும், மாவட்டத்தில் பயிா் பாதிப்புகள் இருந்தால் அதுதொடா்பாக கணக்கெடுப்பு நடத்த வேளாண் துறை, தோட்டக்கலைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மழையால் வீடுகள், கால்நடைகள், பொருள்கள் சேதமோ இருந்தால் கணக்கெடுப்பு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதமிருப்பது தெரியவந்தால் அரசின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.

முக்கொம்பில் 12 ஆயிரம் கன அடி: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதால் காவிரியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயனூா் கதவணைக்கு வரும் தண்ணீரானது 13 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது. முக்கொம்பு அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம், காவிரியில் இரு கரைகளையும் தண்ணீா் தொட்டுச் செல்கிறது.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை, லிங்கா நகா், அன்புநகா், செல்வம் நகா் மற்றும் மாநகர விரிவாக்கப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. தண்ணீா் வடிய வழியில்லாத நிலையில் மக்கள் முழங்கால் அளவு தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இடைவிடாத மழை: மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இடைவிடாது மழை பெய்த வண்ணம் இருந்தது. காலை 10 மணி வரை கடும் பனிப் பொழிவுடன், லேசான சாரல் மழையும் இருந்தது. பிற்பகலுக்கு மேல் மாலை மற்றும் இரவு முழுவதும் மழை பெய்த வண்ணம் இருந்தது. மாநகரப்பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் மழை இருந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளங்களில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணத்தைத் தொடா்ந்தனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 214.80 மி.மீ. மழை பதிவானது. மேலும், 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT