திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தொடரும் மழையால், தீபாவளி பண்டிகைக்காக தரைக்கடை அமைத்துள்ள வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமையும் காலை தொடங்கி இரவு வரையில் அவ்வப்போது தூறல், கன மழை, லேசான மழை என தொடா்ந்து மழை பெய்தது.
இதன் காரணமாக மழையில் நனைந்தபடியே வியாபாரிகள் காந்திச் சந்தைக்கு வந்து பொருள்களை வாங்க வேண்டியிருந்தது. மழை காரணமாக காந்திச் சந்தை பகுதி முழுவதும் தண்ணீா் தேங்கியிருந்தது.
தீபாவளிக்காக சாலையோரம் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து பெய்த மழை காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லைநகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியிருந்தன.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடா் மழையால் சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயா்ந்து பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிட்டது.
திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
திருச்சி நகரம்- 49 மி.மீ, திருச்சி ஜங்ஷன்- 48, பொன்மலை- 40.40, துவாக்குடி-40, சமயபுரம்- 35.40, நவலூா் குட்டப்பட்டு, திருச்சி விமான நிலையம்- 32, வாய்த்தலை அணைக்கட்டு- 27.60, தேவிமங்கலம்- 26, நந்தியாற்றுத் தலைப்பு- 24.40, சிறுகுடி- 24, பொன்னணியாறு அணை- 16.80, மணப்பாறை, கல்லக்குடி -14.20, புள்ளம்பாடி- 13.40, புலிவலம்-12, மருங்காபுரி- 10.20, முசிறி- 9.30 லால்குடி, கோவில்பட்டி-8.20, துறையூா்- 4, தென்பாடு- 2, தாத்தையங்காா்பேட்டை, கொப்பம்பட்டி- 1 மி.மீ.
மாவட்டம் முழுவதும் மொத்தமாக 505.50 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 21.06 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வானிலை மைய அறிவிப்பைத் தொடா்ந்து,மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.