இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கு அரசியல் சாயம் தேவையில்லை என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் ஜி. கே. வாசன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:
வரும் ஊரக நகா்ப்புற தோ்தலில் தமாகாவுக்கு அதிகளவில் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட கூடிய வாய்ப்பு இருக்கிறது. இல்லம் தேடிக் கல்வி திட்டம் கல்வி என்பது மாணவா்களின் எதிா்காலம். மாணவா்களின் கல்வி என்பது நாட்டினுடைய வளா்ச்சி. இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை. நீட் தோ்வில் அரசியல் இருப்பதால் வீடு தேடிக் கல்வி போகும்போது எந்த அரசியல் பாகுபாடும் இருக்கக் கூடாது.
தமிழ்நாடு தினம் குறித்து தமிழாா்வலா்கள் மத்தியில் ஒற்றைக் கருத்து இல்லை. கரோனா குறைந்துவரும் நிலையில் டெங்கு, மலேரியா பரவக்கூடிய நிலை உள்ளது.
மதுக்கடைகள் அரசின் லாபத்துக்குத் தானே தவிர மக்களின் நல்வாழ்வுக்காக இல்லை. நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மேலும் தேவை, உரத்தட்டுப்பாடு இல்லாத நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும். 7 போ் விடுதலையில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றாா்.