திருச்சி

நேர்மையாக வாக்களித்தவர்களுக்கு நன்றி: கருணாஸ்

4th May 2021 06:34 PM

ADVERTISEMENT

நடைபெற்ற பண நாயகத் தேர்தலில் நேர்மையான அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்த அந்த 40 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி என்றார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியது, எனது சமூகம் சார்ந்த கோரிக்கைகளை கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் அவற்றை புறந்தள்ளிய முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், அதிமுக தேர்தலை சந்தித்தது. அதில் முக்குலத்தோர் இன மக்கள் தங்களது கோபத்தை காண்பித்ததால் தோல்வியை தழுவி ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்று அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டவர். எனவே தமிழகம் தற்போதுள்ள சூழலில், கடன்சுமை மற்றும் கரோனா தொற்று உள்ளிட்ட நிலைமைகளிலிருந்து மீட்பார். தற்போது தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல, பண நாயக தேர்தல். இதில் பணப்பட்டுவாடா எங்கள் பகுதிக்கு வரவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்த கேவலமான நிகழ்வுகளும் தமிழகத்தில் நிலவியது வருத்தப்படக்கூடியது. பண நாயகம் நீடித்தால் வசதியற்ற நேர்மையான சாமானியர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இது நல்ல முன்னுதாரணம் கிடையாது. எனவே நேர்மையான அரசியலில் ஈடுபடுவோரை நாம் ஊக்குவிப்பது அவசியம்.

அந்த வகையில் நேர்மையான முறையில் (வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல்) போட்டியிட்ட நடிகர்கள் கமலஹாசன், சீமான் உள்ளிட்ட கட்சிகளுக்கு சுமார் 40 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். பண நாயகத்திலும் நேர்மையாக வாக்களித்துள்ள அந்த 40 லட்சம் பேருக்கு நன்றி கூறியாக வேண்டும். இவர்கள் எதிர்காலத்தில் பல கோடி பேராக உயரவும் வாய்ப்புள்ளது. ஆனால்திராவிடக் கட்சிகள் அந்த 40 லட்சம் இளைஞர்களை தன்வசப்படுத்த தவறி விட்டது. நான் சமூகம் சார்ந்த அமைப்பை நடத்தி வருகிறேன். எனது சமூகத்துக்கு மட்டுமின்றி முக்குலத்தோர் (சீர்மரபினர்) பட்டியிலில் இடம்பெற்றுள்ள 108 பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக 12 கோரிக்கைகளை முன் வத்து போராடி வருகிறோம்.

ADVERTISEMENT

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலினிடம் இது குறித்து முறையிடுவேன். அவர் 12 கோரிக்கைகளில் கண்டிப்பாக சிலவற்றையாவது நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுள்ளது என்றார் அவர்.
 

Tags : karunas
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT