துறையூர்: துறையூர் அருகே விசாரணைக்கு அஞ்சி காவல் நிலையம் மொட்டை மாடியிலிருந்து குதித்த இளைஞர் பலியாகியுள்ளார்.
முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த் (27). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு (2018) முன்னர் தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் சித்ரா தம்பதியரின் 16 வயது மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பிரசாந்தும், நாகராஜின் மகளும் திருப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவியாகக் குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நாகராஜின் மகள் தற்போது கருத்தரித்துள்ளாராம்.
இந்த நிலையில் பிரசாந்த பிப். 4ம் தேதி நாகராஜைத் தொடர்பு கொண்டு தன் மனைவியின் ஆதார் அட்டையைக் கேட்டுள்ளார். உடனே நாகராஜ் தன் மகளை பிரசாந்த் கடத்திச் சென்று திருப்பூரில் வைத்திருப்பதாகவும், தான் 2018ல் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படியும் ஜெம்புநாதபுரம் காவல் துறையினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பிரசாந்தின் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் அவருடைய தம்பி சதீஷ் (19), உறவினர்கள் குணசேகரன் (37), ராஜகோபால் (30), தங்கதுரை (30) ஆகியோரை ஜெம்புநாதபுரம் எஸ்ஐ முகமது ரபீக் அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். அப்போது தன் அண்ணன் பிரசாந்த் திருப்பூரில் இருப்பதாக சதீஷ் கூறியுள்ளார். இதையடுத்து சதீஷை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அங்கிருந்து பிரசாந்தை ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்துக்கு நேற்று (பிப். 6)அழைத்துச் சென்றனர். மேலும் பிரசாந்தின் மனைவி மற்றும் குழந்தையை பேருந்தில் வரச் சொல்லி விட்டனர்.
இந்த நிலையில் முகமது ரபீக் மதிய உணவுக்கு வெளியில் சென்றுவிட்டாராம். அந்த சமயத்தில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரசாந்திடம் விசாரித்துள்ளார்.
இதனால் காவல் துறையினர் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என அஞ்சிய பிரசாந்த் காவல் நிலையத்திலிருந்து குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள மனைவியையும் அழைத்துள்ளார்.
அப்போது அவருடைய மனைவி பிரசாந்தின் காலைப் பிடித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிடுமாறு கேட்டுள்ளார். உடனே அவரை உதறித் தள்ளிவிட்டு ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தின் முதல் தளத்திலிருந்து மொட்டை மாடிக்கு விரைவாக ஏறிச் சென்ற பிரசாந்த் அங்கிருந்து கீழே குதித்து உடல் காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
இதையடுத்து, காவல் துறையினர் அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர் பிரசாந்தை அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து, பிரசாந்த் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஐஜி ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி எஸ்பி (பொ) செந்தில்குமார், முசிறி டிஎஸ்பி பிரேமானந்தம் ஆகியோர் ஜெம்புநாதபுரம் காவல் நிலையம் சென்று நேரில் விசாரித்தனர்.
காவல் நிலையத்தின் மொட்டை மாடியிலிருந்து பிரசாந்த் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், காவல் துறையினரின் கவனக்குறைவான விசாரணை குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரசாந்த் உயிரிழப்பைக் கண்டித்தும் தொடர்புடைய காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கொளக்குடி கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.