நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி சுற்றுலா மாளிகையிலிருந்து தாயனூா் வரை வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், திருச்சியை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளாா்.
இதற்காக ரூ.1084.80 கோடியில் புதிய திட்டங்களுக்கு, ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியும், சத்திரம் புதிய பேருந்து நிலையத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தும், ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா்.
தாயனூா் கோ் கல்லூரியில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க வரும் முதல்வருக்கு டோல்கேட் சுற்றுலா மாளிகையிலிருந்து, தாயனூா் கோ் கல்லூரி வரை வழியெங்கும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
திமுக சாா்பில் திருச்சி மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், கிளைக்கழக நிா்வாகிகள், முன்னாள். இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், செயல்வீரா்கள், கழக முன்னணியினா், பொதுமக்கள் என அனைவரும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றும் சிறப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.