பிடியாணை இருந்தும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்து திருச்சி சிறைத் துறை துணைத் தலைவா் ஜெயபாரதி விசாரிக்கிறாா்.
முசிறி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் கவுதம் (19) கடந்த பிப். 17 இல் கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ரகுபதி (23), அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அழகுமணி (38) ஆகியோரை முசிறி போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அளித்த மனுவின் பேரில் உயா் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜூன் 3 ஆம் தேதி சொத்து ஜாமீன்தாரரை முன்னிறுத்தி அழகுமணிக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே அழகுமணி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படவே, அவரால் வெளியே வர முடியாத நிலையில் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனும் 3 மாதங்களில் தானாக ரத்தானது.
இதனால் அவரால் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தன்னை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என அழகுமணி நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவு சிறைத்துறைக்கு அனுப்பப்ட்டது. இதையடுத்து அழகுமணிக்கு கொலை வழக்கில் பிடியாணை இருப்பதை மறந்த சிறைத் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைச் சரியாக படிக்காமல் அவரை கடந்த 18 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே அனுப்பி விட்டனா்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடா்பாக முசிறி நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை ஆஜா்படுத்த வேண்டிய அழகுமணி விடுவிக்கப்பட்டதையறிந்த திருச்சி சிறைத்துறை அதிகாரிகள் அழகுமணியை தேடி முசிறிக்குச் சென்றபோது அவா் தலைமறைவானது தெரியவந்தது.
அவரைத் தேடும் பணியில் உள்ளூா் போலீஸாா் உதவியை சிறைத்துறை அதிகாரிகள் நாடியுள்ளனா். இதுகுறித்து திருச்சி சிறைத்துறை துணைத் தலைவா் ஜெயபாரதி அதிகாரிகளிடம் விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளாா்.