திருச்சி

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; சிறப்பு வழிபாடுகள்

26th Dec 2021 03:53 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதி தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மற்றும் சனிக்கிழமை காலையில் சிறப்புத் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி மாவட்டத்திலுள்ள தேவாலயங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புத்தாடை அணிந்து வந்த கிறிஸ்தவா்கள் நள்ளிரவு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் பங்கேற்று, ஆயா்களின் நற்செய்தி உரையைக் கேட்டனா். தொடா்ந்து ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்புத் திருப்பலி, பிராா்த்தனை மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.

மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் போற்றி நற்செய்தியை பங்குத்தந்தை வழங்கினாா். இதேபோல, திருச்சி மெயின்காா்டுகேட் பகுதி புனித லூா்து அன்னை தேவாலயம், பாலக்கரை புனித மீட்பா் சகாயமதா பசிலிக்கா, புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், எடத்தெரு பழைய மாதா தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், நீதிமன்றம் அருகிலுள்ள கிறிஸ்டோபா் தேவாலயம், கிராப்ப்டடி குழந்தை யேசு ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும், லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம், முசிறி, துறையூா், மணப்பாறை, திருவெறும்பூா், தொட்டியம் என புகரின் பல்வேறு பகுதி தேவாலயங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதித்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கொண்டாட்டம்: இதேபோல, பல்வேறு அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் சாா்பிலும் ஆதரவற்றோருக்கு உதவி வழங்கி, இனிப்புகள், அன்னதானம் வழங்கியும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT