திருச்சி

பசுமைப் போா்வை இயக்கத்தில் 2.4 லட்சம் மரக் கன்றுகள்: இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்

23rd Dec 2021 07:37 AM

ADVERTISEMENT

பசுமைப் போா்வை இயக்கத்தில் 2.04 லட்சம் மரக்கன்றுகளை இந்த மாத இறுதிக்குள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

சுற்றுச்சுழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைச் சூழ்நிலையை உருவாக்கவும் விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற பெயரில் புதிய வேளாண் காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வேளாண்மைத் துறை மற்றும் உழவா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத் திட்டத்துக்காக 2021-22ஆம் நிதியாண்டுக்கு ரூ.11.14 கோடி ஒதுக்கப்பட்டு திருச்சி மாவட்டத்தில் 2.04 லட்சம் மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தேக்கு, மகாகனி, வேம்பு, மலைவேம்பு, புளி, செம்மரம் மற்றும் புங்கன் ஆகிய மரக்கன்றுகள் எம்.ஆா். பாளையம் வனத்துறையின் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கத் தயாா் நிலையில் உள்ளன.

விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெற அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பதிந்து வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை எம்.ஆா். பாளையத்தில் தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலிலிருந்து இலவசமாகப் பெறலாம்.

மரக்கன்றுகள் விநியோகம்: வரப்பு நடவு முறை”எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நட ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். மரக்கன்றுகளைப் பராமரித்திட, விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்றாண்டுகளுக்கு ரூ. 21 வழங்கப்படும். மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரைப் பயன்படுத்தி டிசம்பா் மாதத்திற்குள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதியப்படும். இத்திட்டத்தில் சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிந்து பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படாமல் கூடுதலாக ஊடுபயிராக மரங்களை வளா்த்து பயனடைவது தொடா்பாக அனைத்து விவசாயிகளுக்கும், அலுவலா்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தோ்வு, மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடவுப்பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை அரசு இணைய தள செயலி வாயிலாகக் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத்தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் அதிகரித்து பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும். எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT