கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் மற்றும் கட்டுமான பெண் தொழிலாளா்கள் மாநில அமைப்பு குழு கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவா் க. சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கே. ரவி அறிக்கை சமா்ப்பித்து உரையாற்றினாா்.
கூட்டத்தில் துணைப் பொதுச்செயலா் செல்வராஜ், பொருளாளா் முருகன், செயலா்கள் தில்லைவனம், சேது, ஏ.எஸ். கண்ணன், கட்டுமான பெண் தொழிலாளா் மாநில ஒருங்கிணைப்பாளா் நந்தினி, இணை ஒருங்கிணைப்பாளா்கள் கலாராணி, மருதாம்பாள் பொருளாளா் புஷ்பராணி, திருச்சி செல்வகுமாா், புதுக்கோட்டை பாலச்சந்திரன், கரூா் வடிவேலன் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டச் செயலா்களும் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளி 60 வயதில் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும்போது வாரிய பதிவைப் புதுப்பிக்கவில்லை என ஓய்வூதியம் மறுக்கப்பட்ட வா்களுக்கு சட்டவிதிகளை திருத்தி அவா்களின் பதிவை ஒருமுறை புதுப்பித்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களின் பிரசவ உதவித்தொகையை ரூ. 18000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வாரிய பதிவு செய்த வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளிக்கு வீடு கட்ட நாலரை லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.