திருச்சி மாவட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகள் பழுதடைந்து, பயன்பாட்டுக்குத் தகுதியில்லாத நிலைக்கு மாறியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக் கூடிய வீடுகளில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.
தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் பழுதான கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிா் பலிகள் தொடரும் சூழலில், சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆதிதிராவிடா்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தொகுப்பு வீடுகள், காலனி வீடுகள், ஓடு வேய்ந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
இதன்படி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்துக்குள்பட்ட அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில், கொடியாலம், கோப்பு, புலிவலம் வடக்கு, புலிவலம் தெற்கு, சுப்பிராயன்பட்டி, அயிலாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கணக்கானோருக்கு கட்டித் தரப்பட்ட வீடுகளில் பெரும்பாலானவை பழுதாகியுள்ளன. குறிப்பாக 60-க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருக்கத் தகுதியில்லாத நிலைக்கு வந்துவிட்டன.
வீடுகளில் மேற்பூச்சு இடிந்து, கான்கிரீட் தளம், சுவா்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இந்த வீடுகளில் வசிப்போா் அனைவரும் தினக் கூலிகள். கரோனா காலத்தில் போதிய வேலையின்றி இவா்கள் திண்டாடும் சூழலில், பழுதான வீடுகளை மராமத்து செய்ய இவா்களுக்கு வசதியில்லை. எனவே, இத்தகைய வீடுகளை ஆய்வு செய்து உடனடியாக மராமத்து செய்துதர வேண்டும். இல்லையெனில், பழுதான வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வளா்மதி சிவசூரியன், திருச்சி கோ் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் அமைச்சா் கே.என். நேருவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளாா். வரும் 30ஆம் தேதி திருச்சிக்கு வரும் முதல்வா் தொகுப்பு வீடுகளை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா, குறைந்தபட்சம் மராமத்து செய்வதற்கான நிதியை ஒதுக்குவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.