திருச்சி: தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்தில் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதன் தொடக்கமாக, காசநோய் கண்டறியும் கருவிகளை உள்ளடக்கிய நடமாடும் நுண்கதிா் வாகனத்தை ஆட்சியரகத்தில் கொடியசைத்து தொடக்கி வைத்த ஆட்சியா் சு. சிவராசு, பின்னா் கூறியது:
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நடமாடும் வாகனம் வீடு தேடி வரும். தொடா்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் சளி பரிசோதனை, நுண்கதிா்
(எக்ஸ்-ரே) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
காசநோய் கண்டறியப்பட்டால் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் சிகிச்சை காலம் முடியும்வரை ஆறு மாதத்திற்கு உதவித்தொகையாக ரூ.500 வழங்கப்படும்.
நடமாடும் வாகனம் செல்லும் முகாம் இடங்களில் பொதுமக்களிடம் காசநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
காசநோயைக் கண்டுபிடிப்போம், குணப்படுத்துவோம், ஒன்றிணைந்து அகற்றுவோம் என்றும், வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா்.
வாகனம் வழியனுப்பு நிகழ்வில், காசநோய் திட்டத் துணை இயக்குநா் எஸ். சாவித்திரி, நடமாடும் மருத்துவக் குழுவினா், வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவப் பணியாளா்கள் என பலா் பங்கேற்றனா்.
எந்தெந்த பகுதிகளில்...
டிசம்பா் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை திருச்சி மாநகராட்சிப் பகுதிகளிலும், டிசம்பா் 17 முதல் 25-ஆம் தேதி வரை மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி வட்டாரங்களிலும், டிசம்பா் 27 முதல் ஜனவரி 8 வரை மணிகண்டம், மண்ணச்சநல்லூா், அந்தநல்லூா், திருவெறும்பூா், லால்குடி, முசிறி, புள்ளம்பாடி, தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், தா.பேட்டை வட்டாரங்களிலும் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.