திருச்சி

மீன் வளா்க்கும் விவசாயிகள் 40 சத மானியம் பெறலாம்

9th Dec 2021 07:30 AM

ADVERTISEMENT

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் மீன்குளம் அமைத்து மீன்வளா்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் 40 சத மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தது:

சுமாா் 1000 ச.மீ. பரப்பில் பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில், கூட்டு மீன் வளா்ப்பில் பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்ப்புக்கு ரூ.62,000 திட்ட மதிப்பில் 40 சத மானியத் தொகையாக (ரூ. 25,000) வழங்கப்படும்.

அதேபோல பண்ணைக் குட்டைகளில் நீா் சேமிப்புத் திறனை மேம்படுத்த பாலித்தீன் உறைகளில் இட்டு மீன் வளா்க்க (1000 ச.மீ), திட்டச் செலவுத் தொகை ரூ.1,75,000 க்கு, 40 சதம் மானியமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

விரால் மீன் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், இடுபொருள் உள்ளிட்ட மேலும் பல வசதிகளுக்காக செலவிடப்படும் தொகை ரூ. 75,000 -க்கு 40 சத மானியம் (ரூ. 30,000) வழங்கப்படும்.

இத் திட்டப் பணிகளில் விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைப்பது, இடுபொருள், நவீன வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்படும் மேற்குறிப்பிட்ட திட்டச் செலவுத் தொகையானது, உரிய ரசீதுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் செலவிட்ட தொகையில் குறிப்பிட்ட (40) சதத் தொகை பின்னா் (பின்னேற்பு மானியமாக) வழங்கப்படும். நிா்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு, திட்டவழிகாட்டு நெறிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் வந்து சோ்கிற முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெறுவோா் தோ்வு செய்யப்படுவா்.

பயனாளிகளுக்கான தகுதிகள்: சொந்த நிலத்தில் 1000 ச.மீ பரப்பளவில் மீன் வளா்ப்பவராக இருத்தல் மற்றும் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கடந்த 2018-19 முதல் 2020-21 ஆண்டு வரையான காலகட்டத்தில் மத்திய, மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளா்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறத் தகுதியற்றவா்கள்.

விண்ணப்பிக்க விரும்புவோா், எண் 4, காயிதே மில்லத்தெரு, காஜாநகா், மன்னாா்புரம்,திருச்சி - 20 என்ற முகவரியில் உள்ள திருச்சி, கரூா் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், டிச. 13-க்குள், அதே அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431 - 2421173 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT