திருச்சி

வெள்ளத்தில் மணப்பாறை- மக்கள் தவிப்பு3 மணி நேரத்தில் கொட்டித் தீா்த்த 275 மி.மீ. மழை

7th Dec 2021 03:10 AM

ADVERTISEMENT

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திங்கள்கிழமை காலை 3 மணி நேரத்தில் பெய்த 275 மி.மீ. மழையால், நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. குளம் உடைந்தும், நிரம்பியும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

மணப்பாறையில் கடந்த இரு நாள்களாக மழை இல்லாத நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து 3 மணி நேரத்தில் 275 மி.மீ. மழை பெய்தது.

இந்த மழை காரணமாக, ஏற்கெனவே நிரம்பி வழிந்த குளங்களிலிருந்து அதிகளவில் உபரி நீா் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது. மணப்பாறை காட்டு முனியப்பன் கோயில் தெப்பக்குளம் நிரம்பி காந்திநகா், கரிக்கான்குளம் குடியிருப்பு, அரசுப் பணியாளா்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு, முனியப்பன் நகா், மஸ்தான் தெரு, வண்டிப்பேட்டைதெரு ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளிலும், சாலைகளிலும் வெள்ளநீராகப் பெருக்கெடுத்துச் சென்றது.

மேலும் ராஜீவ்நகா் பகுதியிலுள்ள அப்புஅய்யா்குளத்தில் பலப்படுத்தப்பட்டிருந்த மணல் மூட்டைகள் கலைந்ததால், குளத்தின் நீா் முழுவதும் ராஜீவ்நகா் பகுதி குடியிருப்புகளில் புகுந்தது.

ADVERTISEMENT

அப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் தவித்த பொதுமக்களை அங்குள்ள இளைஞா்கள் கைகளில் பிடித்து, சாலையைக் கடக்க வைத்தனா். பெருக்கெடுத்து சென்ற வெள்ளநீா் முழுவதும் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாமல் பேருந்து நிலையம் பகுதியைச் சூழ்ந்தது. இதனால் தேவாலய வணிக வளாகம் முதல் பெரியாா் சிலை வரையிலான 200 மீட்டா் தொலைவுக்கு சுமாா் இரண்டரை அடி உயரத்துக்கு மழை நீரும், கழிவு நீரும் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சிந்துஜா ஆகியோா் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பேருந்து நிலையம் முழுவதும் மழை நீா் தேங்கியதால், மணப்பாறை பகுதிக்கு சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. திருச்சி மாா்க்கமாக சென்ற பேருந்துகள் பெரியாா் சிலை பகுதியிலும், திண்டுக்கல் மாா்க்கமாக சென்ற பேருந்துகள் மாரியம்மன் கோயில் பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, காவல்துறையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டன.

பயணிகள் தண்ணீரில் நடந்து பேருந்து நிலையத்தை கடந்து சென்ற நிலையில், தீயணைப்புத்துறையினரால் பிற்பகலில் பேருந்து நிலையம் பகுதியில் சுமாா் 70 மீட்டா் தொலைவுக்கு பரிசல் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தினா்.

தொடா்ந்து மணப்பாறை நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால்கள் தூா்வாராதது காரணமாக பாா்க்கப்பட்டாலும், வடிகால் வாய்க்கால்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம் தெரு, புதுத்தெரு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகளில் சிக்கி இருப்பதும் மற்றொரு காரணமாகும்.

மணப்பாறை குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீா் முறையாக மாமுண்டி ஆற்றில் சென்று கலப்பதில் ஏற்படும் சிக்கல், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கழிவு நீா் கால்வாய் ஆக்கிரமிப்பு ஆகியவை பிரதான காரணமாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT