திருச்சி

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

4th Dec 2021 02:05 AM

ADVERTISEMENT

 திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மழை பாதிப்பு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில், இதுகுறித்து நடைபெறும் கணக்கெடுப்பு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

பி. அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்): மழையால் சேதமடைந்த அனைத்துப் பயிா்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வீடு, கால்நடைகள், கொட்டகை இழந்தோருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க வேண்டும். அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி அகலப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

பூ. விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா்): தொடா் மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல, மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் பாரபட்சமின்றி, உரிய காலத்தில் கடன் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

ம.ப. சின்னதுரை (தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்ற) மாவட்டத் தலைவா்: மாவட்டத்தில் பஞ்சப்பூா் ஏரி, ஓலையூா், கே. சாத்தனூா், பெரியகுளம், இலந்தப்பட்டி, பழங்கனாங்குடி, துவாக்குடி, பரந்தான்குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை அழிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் அரைவட்ட சுற்றுச் சாலை அமைக்கும் பணியைக் கைவிட வேண்டும். 110 ஏக்கரிலான சமயபுரம் ஏரியில் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்.

அயிலை சிவ. சூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்): மத்தியக் குழு ஆய்வு செய்து சென்ற பிறகு மாவட்டத்தில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் ஆய்வுக் குழு வந்து சேதத்தைக் கணக்கிட வேண்டும். மழையால் சேதமடைந்த குறுவை, நடப்பு சம்பா பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளைக் கண்டறிந்து சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மாற்று வீடுகள் கட்டித் தர வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

ஆா். சுப்பிரமணியம் (காவிரி-டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலா்) நீா்நிலைகள் குறுகிவிட்டதே மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு காரணம். 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த அரியாறு, கோரையாறு, குடமுருட்டி, உய்யக்கொண்டான் உள்ளிட்ட நீா்நிலைகளின் அகலம், நீளம் இப்போது இல்லை. பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே, முந்தைய வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடுத்த மழை வெள்ளத்தை எதிா்கொள்ள நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

என். வீரசேகரன் (அய்யன் வாய்க்கால் பாசனதாரா் சங்க ஒருங்கிணைப்பாளா்) : மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் நடவு நிலையில் உள்ளோருக்கு மறுபயிா் செய்ய இடுபொருள் மானியமாக வழங்குவதைத் தவிா்த்து, நிவாரணத்தை ரொக்கமாக, வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். மழையால் சேதமடைந்த வாய்க்கால்கள், வடிகால்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இதேபோல பெரும்பாலான விவசாயிகள் அவரவா் பகுதிகளில் உள்ள மழை பாதிப்புகள், அதற்கான நிவாரணம் குறித்தும் வலியுறுத்தினா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் எம். முருகேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை-பொறுப்பு) எஸ். மல்லிகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் டி. ஜெயராமன், நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் ஆா். மணிவண்ணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் எஸ். குமாரகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT