திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு தனி வார்டு: மருத்துவக் கல்லூரி முதல்வர் 

3rd Dec 2021 04:25 PM

ADVERTISEMENT

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது என கி ஆ பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஒமைக்ரான் பரிசோதனை குறித்து தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 32 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஒமைக்ரான் சிகிச்சைப்பிரிவில் அவசர சிகிச்சை பிரிவுக்கு என தனியாக 8 படுக்கைகளும், மீதம் உள்ளது படுக்கைகள் அனைத்தும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க- சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

ADVERTISEMENT

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 10.45 மணி அளவில் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரது சளியின் மாதிரி சென்னையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீவிர கண்காணிப்பில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த கரோனா முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பரவலை விட தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் கொடிய தொற்று நோயாக உள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இருந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் முகக்கவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடித்தால் நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
 

Tags : Omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT