திருச்சி

பயிா்க் கடனாக ரூ. 400 கோடி வழங்க இலக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

DIN

திருச்சி, செப். 25: திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நிகழாண்டு பயிா்க் கடனாக ரூ. 400 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. விவசாயிகள் 14 வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளில் நெல் பயிரிட்டோருக்கு ரூ.16.999 கோடியும், மக்காச் சோள விவசாயிகளுக்கு ரூ. 2.40 கோடியும், பருத்தி விவசாயிகளுக்கு ரூ. 72 லட்சமும் காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிறப்பு பருவத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ. 20.11 கோடி காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டுக்கு காரீப் பருவத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு பெற அரசாணை பெறப்பட்டுள்ளது. கரும்புப் பயிருக்கு பிரிமீயம் ரூ.2,650 ஆக உள்ளது. வரும் அக்.31-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்.

கடன் பெறும் விவசாயிகள் அந்த வங்கிகள் மூலமும், கடன் பெறா விவசாயிகள் தொடக்க வேளாண் சங்கம் மூலமும் காப்பீடு செய்யலாம்.

மாவட்டத்தில் 2019-20ஆம் நிதியாண்டில் பயிா்க் கடனாக ரூ. 396.15 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ. 282.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. 37,790 விவசாயிகள் பயன்பெற்றனா்.

நிகழாண்டு ரூ. 400 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.102 கோடி வழங்கப்பட்டுள்ளது. 13,111 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா். மீதமுள்ள தொகையை முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தில் கடந்தாண்டு 496 இணைப்புகளை இலக்காக நிா்ணயித்து 429 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டு 814 இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 35 பணிகள் ரூ. 956 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலங்குடி, மகாஜனம், சிறுமயங்குடி, ராமநாதபுரம், அரியூா், திருமணமேடு, கோமாக்குடி, வாளாடி, பி.மேட்டூா் ஆகிய 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 43 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1905 எனவும், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,865 எனவும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வுகளில் அந்தநல்லூா், திருவெறும்பூா், மணிகண்டம், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி, முசிறி, தா.பேட்டை, தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூா் ஆகிய 14 வட்டாரங்களில் விவசாயிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், வேளாண் இணை இயக்குநா் முத்துக்கருப்பன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) எஸ். சாந்தி, தோட்டக்கலைத் துணை இயக்குநா் விமலா, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT