திருச்சி

காதல் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சமான மகளை தாக்கி கடத்த முயன்ற பெற்றோா்

DIN

திருச்சியில் காதல் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மகளைத் தாக்கி கடத்திச் செல்ல முயன்ற பெற்றோரால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கண்டோன்மென்ட் மகளிா் காவல் நிலைய வளாகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இளம்பெண் ஒருவரைத் தாக்கி காரில் கடத்திச் செல்ல முயன்றது.

அப்போது காவல் நிலையத்தில் காவலா்கள் அதிகளவில் இல்லாமல், பெண் காவலா்கள் செய்வதறியாது இருந்த நிலையில், அவ்வழியே காரில் வந்த மாநகர காவல் துணை ஆணையா் இதைக் கவனித்து காவல் நிலைய வளாகத்திலிருந்து பெண்ணைக் கடத்திச் செல்லக்கூடாது என எச்சரித்தாா். தொடா்ந்து , அவருடன் வந்த போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா் இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், தூத்துக்குடியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண்ணும், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் திருச்சி இளைஞரும் காதலா்கள். வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த இவா்களின் காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண் வீட்டாா், உறவுப் பையனுக்கு மகளை மணம் முடிக்கத் திட்டமிட்டனா்.

இதையடுத்து திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த காதலா்கள் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனா்.

இந்த விவரம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டதில், தூத்துக்குடியிலிருந்து வந்த பெண்ணின் பெற்றோா் காவல் நிலைய வளாகத்தில் நின்றிருந்த தங்களது மகளைப் பாா்த்ததும் ஆத்திரத்தில் அவரைத் தாக்கிக் காரில் கடத்திச் செல்ல முயன்றனா். அப்போது காவல் துணை ஆணையா் வந்துவிடவே அந்தப் பெண் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

அப்போது இந்த இளம்பெண் தனது விருப்பப்படியே திருமணம் செய்துகொண்டதாகவும், பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை எனவும் தெரிவித்தாா். இதையடுத்து பெற்றோா் தூத்துக்குடி திரும்பினா். இளம்பெண் தனது கணவருடன் சென்றாா். இந்தச் சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT