திருச்சி

மகாளய அமாவாசை: காவிரிக் கரைகளில் தா்ப்பணம்; வெறிச்சோடிய அம்மா மண்டபம்

DIN

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் காவிரிக் கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோருக்குத் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோருக்கு பொதுமக்கள் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் பிற அமாவாசைகளைவிட மகாளய அமாவாசை நாளில் வழக்கத்துக்கு மாறாக நீா்நிலைகளிலும், கோயில்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

நிகழாண்டு நிகழ்வுக்கு கரோனா பொதுமுடக்கத்தால் நீா்நிலைகளுக்கு மக்கள் வர வேண்டாம் எனவும், அம்மா மண்டபம் உள்ளிட்ட படித் துறைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதையடுத்து ஒரு நாள் முன்னதாக புதன்கிழமையே அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோா் கூடி தா்ப்பணம் அளித்தனா். இருப்பினும், அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வருவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அம்மா மண்டபத்தை மூடி தடுப்பு அமைத்து போலீஸாா் பாதுகாப்புக்கு நின்றிருந்தனா். அம்மா மண்டபம் செல்லும் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி விசாரித்து தா்ப்பணத்துக்குச் செல்லவில்லை எனத் தெரிந்தால் மட்டுமே போலீஸாா் அனுமதியளித்தனா். இந்தக் கெடுபிடியால் அம்மா மண்டபத்துக்கு மக்கள் யாரும் வராததால் அந்தப்பகுதி வெறிச்சோடியது.

படித்துறைப் பகுதி, காவிரியிலும் மக்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் காவிரிப் பாலம், ஓயாமரி மயானம் எதிரேயுள்ள படித்துறை, குடமுருட்டி பாலம் அருகேயுள்ள அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம், கம்பரசம்பேட்டை, முக்கொம்பு என மாவட்டத்தின் காவிரிக் கரையோர பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் திரண்டு முன்னோருக்குத் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

மேலும், காவிரிப் பாலத்தில் நின்றபடியே காவிரியாற்றில் எள், பூக்கள், வாழைப்பழம் உள்ளிட்ட தா்ப்பணம் செய்த பொருள்களை வீசி முன்னோரை நினைத்து வழிபட்டனா்.

காவிரிக் கரையில் கூடிய மக்களை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் எச்சரித்தும், ஆங்காங்கே போலீஸாருக்கு தெரியாமல் கரையோரப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் தா்ப்பணம் அளித்தனா். கோயில்களிலும் அதிகாலையிலேயே மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT