திருச்சி

திருச்சியில் தொழிலதிபரின் மகன் காரில் கடத்தல்: காவல்துறையினர் மீட்டனர்

29th Oct 2020 02:14 PM

ADVERTISEMENT

திருச்சியில் தொழிலதிபரின் மகன் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டான். காவல்துறையினர் விரட்டி சிறுவனையும், கடத்தலுக்கு பயன்படுத்தி காரையும் மீட்டனர்.

பிரபல தொழிலதிபர் பி,எல் ஏ கண்ணப்பனின் வீடு, திருச்சி கண்டோண்மென்ட், வார்னர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. அவரின் வீட்டு வாசலில் அவரது 9 வயது மகன், புதன்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது காரில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றுவிட்டனர். இந்த தகவல் உடனடியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்  மைக் மூலம் மாநகர காவல்துறையினரை உஷார் படுத்தியதுடன், மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமிராவில் பதிவாகி இருந்த காட்சியைப் பார்த்து காரின் பதிவெண் கண்டுபிடிக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யும் காவல்துறையினருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். சோமரசம்பேட்டை சாலையில் சென்ற கார் ஒன்று அங்கு காவல்துறையினர் சோதனை மேற்கொள்வதை அறிந்ததும் உடனடியாக திரும்பி மீண்டும் மாநகரை நோக்கி சென்றது. இதனை கண்ட காவல்துறையினர் மைக் மூலம் உஷார் படுத்தியதோடு, உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைம் காவலர் காளிமுத்து ஆகியோர் திடீரென திரும்பி சென்ற காரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தனர். சீனிவாச நகர் பகுதியில் வந்தபோது எஸ்ஐ பாலசுப்பிரமணியத்தை மோதிவிட்டு கார் சென்றது. இதில் எஸ்ஐ சிவசுப்பிரமணயின் கைகளில் காயம் ஏற்பட்டது. ஏட்டு இளங்கோ தனது வாகனத்தை குறுக்கே நிறுத்தி காரை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால் கார் ராமலிங்க நகர் விஸ்தரிப்பு குறுக்குச் சாலையில் சென்றுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலர்கள் விடாமல் துரத்துவதை அறிந்ததும், காரிலிருந்தவர்கள் சிறிது தூரம் சென்றதும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு இறங்கி தப்பியோடிவிட்டனர். காவலர்கள் சென்று பார்த்தபோது காரில் சிறுவன் இருந்துள்ளார். இதனையடுத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கார் அது என்பதை அறிந்த காவலர்கள் மாநகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் சிறுவனையும், கடத்தலுக்கு பயன்படுத்தி காரையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்கள் 3 பேர் காரில் இருந்திருக்காலம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அனைவருக்கும் 20லிருந்து 25 வயதிற்குள் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

கார் பதிவெண்ணை வைத்து மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சியைச் சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

Tags : Trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT