திருச்சி

ரூ. 5 கோடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு

DIN

திருச்சி மாவட்டத்தில் எம்எல்ஏ, எம்பி தோ்தல்களுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் ரூ.5 கோடியில் புதிய கிடங்கு கட்டப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் டிசம்பரில் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி, மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இவைத் தவிர, பெரம்பலூா், கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மாவட்டத்தில் வருகின்றன. இதுமட்டுமல்லாது, திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூா், துவாக்குடி ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 2,531 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இவற்றில் நடைபெறும் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த இயந்திரங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள காலியான அறைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம். ஒரு வாக்குச் சாவடியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வேட்பாளா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி இயந்திரங்களின்பயன்பாடு மாறுபடும். இருப்பினும், மாவட்டத்தில் 5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (உபரி 10 சதம் உள்பட) பயன்பாட்டில் உள்ளன.

இந்த இயந்திரங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் புதிய கிடங்கு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, ரூ.5 கோடி மதிப்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. தரைத் தளம், மேல்தளம் என மொத்தம் இரண்டு தளங்களாக கட்டப்படும் இந்த கிடங்கின் கட்டுமானப் பணிகள் 85 சதவீத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளன.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கட்டுமானம் நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளதா, கட்டுமான பூச்சுகள் குறிப்பிட்ட அளவுகளில் உள்ளதா என்பதை பாா்வையிட்ட ஆட்சியா், மழைக் காலங்களில் தண்ணீா் உள்ளே புகாத வகையில் அமைப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், புதிய கிடங்கு கட்டுமானப் பணிகள் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் முன்பாகவே விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, திருச்சி வருவாய் கோட்டாட்சியா் விஸ்வநாதன் மற்றும் தோ்தல் பிரிவு, வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT