திருச்சி

திருச்சியில் விவசாயிகள்  நூதனப் போராட்டம்

DIN

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேப்பர் ராக்கெட் விடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, தில்லியில் போராட்டம் நடத்திட திருச்சி விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரு தினங்களுக்கு முன்பு தில்லி செல்ல தயாராக இருந்தனர்.

இதற்காக, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து தில்லி செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணுவை அவரது வீட்டிலேயே காவல் துறையினர் சிறை வைத்தனர். இதனால் விவசாயிகள் அங்கேயே அரை மொட்டை அடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் இன்று காலை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பேப்பர் ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், "புதிய வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகும். இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இந்த புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகள் எந்த பிரச்னைக்கும் நீதிமன்றத்தை நாட முடியாது. 

குறிப்பாக ஆட்சியர், ஆர்டிஓ போன்றவர்கள் தவறு செய்தால் நீதிமன்றத்தில் தலையிட்டு தீர்வு காண இயலாது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் விவசாயத்தில் தரம் மற்றும் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும். அதனால் இச்சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.

திருச்சியில் விவசாயிகள் பேப்பர் ராக்கெட் விடும் நூதனப் போராட்டம் 

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டதாக பிரதமர் மோடி கூறியிருப்பது சரியல்ல. எங்களை தில்லி சென்று போராட்டம் நடத்தவும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் சென்று போராட்டம் நடத்தவும் அனுமதிக்கவில்லை. தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தோம். அங்கும் எங்களை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, தற்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். விடிய விடிய இந்த போராட்டம் நடைபெறும். இரவில் போராட்டத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேப்பர் ராக்கெட் விடும் போராட்டம் மூலம் பிரதமர் மோடிக்கு எங்களது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம். அதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT