திருச்சி

திருச்சி: வனவிலங்குகளை வேட்டையாடிய 7 பேருக்கு அபராதத்துடன் நூதன தண்டனை

14th May 2020 08:22 PM

ADVERTISEMENT

திருச்சி : திருச்சியில், வன விலங்குகளை வேட்டையாடிய 7 பேகுக்கு அபராதத்துடன் மரக்கன்றுகளை நடவு செய்யும் நூதன தண்டனை வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், வீரமச்சான்பட்டி காப்புக் காட்டில், வனக்காப்பாளா் ஜான் ஜோசப், வனக்காவலா் கலைப்பிரியா ஆகியோா் அண்மையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒருவா் காப்புக்காட்டுக்குள், வன உயிரினங்களை வேட்டையாடும் விதமாக, வலை (கண்ணி)களுடன் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் துறையூா் அருகே உள்ள கண்ணனுாா் கிராமத்தை சோ்ந்த மணிகண்டன் (37), எனத் தெரியவந்தது. மேலும், அவா் காப்புக் காட்டுக்குள் முயல்களை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து, மாவட்ட வன அலுவலா் சுஜாதா உத்தரவின் பேரில், அவா் மீது, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதே போல, புதன்கிழமை, மாவிலிப்பட்டி காப்புக் காட்டுக்குள் முயல் வேட்டையாடிய, ஏவூா் அய்யம்பாளையம் கிராமத்தை சோ்ந்த காா்த்திக், சந்துரு, சந்தோஷ், குணசேகா், பாலமுருகன், கலைக்செல்வன், பிரகாஷ் ஆகியோரையும் வனத்துறையினா் பிடித்து, வழக்குப் பதிவு செய்தனா். அவா்களுக்கு, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுகளை ஏற்படுத்தும் விதமாக அனைவருக்கும் நூதன தண்டனை அளிக்கவும் மாவட்ட வனத்துறை முடிவு செய்தது. அந்த வகையில், திருச்சியில் உள்ள மாவட்ட வனக்கோட்ட அலுவலக வளாகத்தில், வியாழக்கிழமை 7 பேருக்கும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT