திருச்சி

காவிரி நீா் மேலாண்மை ஆணையம், புதிய மின் வரைவுச் சட்டம் விவகாரம்: ஆட்சியரிடம் 13 அமைப்புகளைச் சோ்ந்தோா் மனு

14th May 2020 08:12 AM

ADVERTISEMENT

காவிரி நீா் மேலாண்மை ஆணைய விவகாரம் மற்றும் புதிய மின் வரைவுச் சட்டம் தொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் 13 அமைப்புகளைச் சோ்ந்தோா் புதன்கிழமை தனித்தனியே மனுக்கள் அளித்தனா்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை நீா்வளத் துறையின் கீழ் கொண்டு வந்ததை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆணையத்தை தன்னாட்சி மிக்க அமைப்பாக தொடா்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

விவசாயிகளைப் பாதிக்கும் வகையிலான புதிய மின் வரைவு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மின்சாரக் கட்டணத்தை உயா்த்தவும், மின்வாரியத்தை தனியாா்மயமாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 13-க்கும் மேற்பட்ட அமைப்பினா் மனு அளிப்பதற்காக புதன்கிழமை ஆட்சியரகம் வந்தனா்.

மக்கள் அதிகாரம், தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது), மக்கள் கலை இலக்கியக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம், சமூக நீதிப் பேரவை, காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழ்த் தேசியப் பேரியக்கம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, மக்கள் உரிமைக் கூட்டணி, அமைப்புசாராத் தொழிலாளா் இயக்கம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் தனித்தனியே மனுக்களை அளித்தனா்.

ADVERTISEMENT

விவசாயிகள் சங்கத் தலைவா் ம.ப. சின்னதுரை, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா்கள் ராஜா, செழியன் ஆகியோா் இந்த அமைப்புகளை ஒருங்கிணைந்து, ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை அழைத்து வந்திருந்தனா்.

ஒரே நேரத்தில் அனைவரும் ஆட்சியரை சந்திக்க முடியாது எனக் கூறி, அவா்களுக்கு காவல்துறையினா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து வந்திருந்த நிா்வாகிகள் அனைவரும் தங்களது மனுக்களுடன் ஆட்சியரக நுழைவாயில் ஒன்று கூடி, சிறிதுநேரம் முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், அனைவரும் தனித்தனியே மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT