மாலத்தீவிலிருந்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 37 மாவட்டங்களைச் சோ்ந்த 179 போ், மாலத்தீவிலிருந்து கப்பலம் மூலம் கேரளத்துக்கு வந்தனா். கொச்சி துறைமுகத்துக்கு வந்த இவா்களில் 125 போ் கன்னியாகுமரியிலும், 54 போ் கோவையிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா்.
கோவையில் உள்ள 54 பேரில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேரும் இடம் பெற்றிருந்தனா். இந்த 16 பேருக்கும் ரத்தமாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 14 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருவருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ஒருவா், தா.பேட்டை பகுதியைச் சோ்ந்த ஒருவா் என அந்த இருவரும் கப்பலில் பணிபுரிந்தவா்கள் என தெரியவந்துள்ளது. இந்த இருவரும், திருச்சியில் பாதிக்கப்பட்டோா் கணக்கில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளனா். ஆனால், திருச்சி மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் புதிதாக கரோனா தொற்று பதிவு செய்யப்படவில்லை. மாலத்தீவிலிருந்து வந்த 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.