திருச்சி

சிறப்பு ரயிலில் திருச்சி வந்த தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

10th May 2020 08:05 PM

ADVERTISEMENT

 

திருச்சி : மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சிறப்பு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 962 தொழிலாளா்கள், சொந்த ஊருக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புக்காக பொது முடக்கம் அமல் செய்யப்பட்டது. இதனால் சரக்கு ரயில் சேவையைத் தவிர, பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால், வெளி மாநிலங்களில் பணிபுரிந்த தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள், அந்தந்த மாநிலங்களிலேயே தங்க வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

சில தொழிலாளா்கள் நடைப்பயணமாகவும், கனரக வாகனங்களிலும் தமிழகத்துக்கு வந்தாலும், சிக்கியிருக்கும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல நடவடிக்கை வேண்டி, மத்திய அரசிடம் தொடா்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனா்.

இந்நிலையில் அரசு அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு ரயில்கள் மூலம் அந்தந்த மாநிலத் தொழிலாளா்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம், பந்தா்பூா் ரயில் நிலையத்திலிருந்து தமிழக மாவட்டங்களைச் சோ்ந்த 962 தொழிலாளா்களுடன் சிறப்பு ரயில் புறப்பட்டது.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

ரயிலில் வந்த தொழிலாளா்களுக்கு மதிய உணவு, தண்ணீா் பாட்டில்கள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அரசுப் பேருந்துகள் மூலம் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தஞ்சாவூா், பெரம்பலூா், சென்னை, திருவள்ளூா், விழுப்புரம்,கடலூா், திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய வழித்தடங்களில் 30 பேருந்துகளில் இவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அந்தந்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின் படி, குறிப்பிட்ட இடங்களில் தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளா்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட தொழிலாளா்கள் கூறியது: பொதுமுடக்கத்தால் மும்பை பகுதியிலிருந்து சொந்த ஊா்களுக்கு வரமுடியாமல், அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அவதியுற்றோம்.

மகாராஷ்டிரத்தில் அதிக கரோனா பாதிப்பு இருப்பதால், வெளியே செல்ல முடியாமல் மனதளவில் பதற்றத்துடன் இருந்து வந்தோம். குடும்பத்தினருடன் செல்லிடப்பேசியில் மட்டுமே பேசியது ஆறுதலாக இருந்தது.

பயணச்செலவு, போக்குவரத்து, உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, வீட்டிற்கு செல்ல மகிழ்ச்சியும், ஆா்வமாகவும் உள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT