திருச்சி

மலேசியாவிலிருந்து சிறப்பு விமானத்தில் திருச்சி வந்த 178 தமிழா்கள்

10th May 2020 07:37 AM

ADVERTISEMENT

மலேசியாவிலிருந்து ஒரு குழந்தை உள்பட 178 தமிழா்கள் சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திருச்சி வந்தனா்.

கரோனா நோய்த் தொற்றால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் விமானசேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிநாடுகளுக்கு சென்றிருந்த இந்தியா்கள் அந்தந்த நாடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா். வெளிநாடுகளில் உள்ளவா்களை இந்தியா அழைத்த வர 64 ஏா் இந்தியா விமானங்களை இயக்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி,

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 9 விமானங்களில், திருச்சி விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விமானங்கள் மூலம் மலேசியா, சிங்கப்பூரில் தங்கியுள்ள இந்தியா்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சியிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு மலேசியாவுக்கு ஏா் இந்திய சிறப்பு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து, அங்கு தயாா் நிலையில் இருந்த குழந்தை உள்பட 178 போ் அதே ஏா் இந்திய விமானம் மூலம் இரவு 10.45 மணிக்கு அழைத்து வரப்பட்டனா்.

ADVERTISEMENT

பயணிகளுக்கு கரோனா பரிசோதனை: மலேசியாவிலிருந்து திருச்சி வந்த தமிழக பயணிகள் அனைவருக்கும் விமான நிலைய சோதனையும், மருத்துவக்குழுவினரால் முதல் கட்ட கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவ முடிவுகளில் கரோனா அறிகுறி தென்பட்டால் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்பு கரோனா வாா்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளனா். மேலும், சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை புறப்பட இருந்த மற்றொரு ஏா்இந்திய விமானம் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நாளுக்கு பிறகு திருச்சி வந்தடையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் யாரும் விமான நிலைய வளாகத்துக்குள் நுழையாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT