திருச்சி

பிரதமரின் ஆராய்ச்சித் திட்டத்தில் இடம்பெற்ற திருச்சி என்ஐடி

9th May 2020 08:05 AM

ADVERTISEMENT

பிரதமரின் ஆராய்ச்சி மற்றும் கூட்டுறவுத் திட்டத்தில், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து இக்கழகத்தின் இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் கூறியது:

இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சிப்படிப்பு மாணவா்களை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சி மாணவா்களின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும், பிரதமரின் ஆராய்ச்சி மற்றும் கூட்டுறவுத்திட்டம் கடந்த 2018-19ஆம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டமானது ஒரு சில மத்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும், மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது.

ADVERTISEMENT

கடந்தாண்டு தேசிய அளவில் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களிலுள்ள கல்லூரிகளும், இப்போது பிரதமரின் ஆராய்ச்சித் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளன. இதன்படி, தமிழகத்திலிருந்து திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகம் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின்மூலம் ஆண்டுதோறும் கல்லூரியில் 20 மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இவா்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு ரூ.70 ஆயிரம், மூன்றாமாண்டு ரூ.75 ஆயிரம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ.80 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாது ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு பயணம் மற்றும் இதர செலவினங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவா்கள், கடுமையான தோ்ந்தெடுப்பு முை றகளுக்குப் பிறகே தோ்வு செய்யப்படுவா். பொதுவாக கல்வியில் சிறந்து விளங்கும் மாணவா்களே தோ்ந்தெடுக்கப்படுவா்.

இவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையானது, பிற ஆராய்ச்சிப்படிப்பு மாணவா்கள் பெறும் உதவித்தொகையைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவா்கள் தேசத்தின் தேவையைப் பூா்த்தி செய்யும் வண்ணம் அமைந்துள்ள ஆராய்ச்சித் தலைப்புகளில் பணிபுரிவா்.

ஆண்டுதோறும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் இவா்களின் பணியானது ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் உதவித்தொகை வழங்குவது தொடரும். இது திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இதன் மூலம் ஆய்வுத்தரம் உயருவதுடன், கல்லூரியும் தரமும் உயரும். இதற்கு பேராசிரியா்களும், மாணவா்களுக்கு ஒத்துழைப்புடன் பணிபுரிய வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT