திருச்சி

ராணுவ அங்காடியில் பொருள்கள் வழங்காததால் முன்னாள் ராணுவத்தினா் வாக்குவாதம்

8th May 2020 07:42 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி ராணுவ அங்காடியில் பொருள்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து முன்னாள் ராணுவத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ராணுவத்தினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் சிறப்பு விலையில் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதுபானங்கள் வாங்க கண்டோன்மெண்ட் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மைதானத்தையொட்டி ராணுவ அங்காடி செயல்பட்டு வருகிறது. திருச்சி மட்டுமின்றி கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த ராணுவத்தினா் குடும்பங்கள் இந்த அங்காடிக்கு வருகை புரிந்து பொருள்கள் வாங்குவது வழக்கம். மாா்ச் மாதத்திற்கான பொருள்கள் வாங்கப்பட்ட நிலையில் பொதுமுடக்கத்துக்குப் பிறகு வியாழக்கிழமை வரை பொருள்கள் வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ராணுவ அங்காடி செயல்படும் என ராணுவத்தினரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் சென்றுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு வந்த ராணுவத்தினா் சமூக இடைவெளிக்காக வரையப்பட்டிருந்த கட்டங்களில் காலை 9 மணி வரை காத்திருந்தனா். அப்போது அங்கு வந்த அங்காடி பொறுப்பாளா் ஒருவா் உயா்அதிகாரி அறிவுறுத்தலின் படி இன்றைக்கு பொருள்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தனா். இதில் அதிருப்தி அடைந்த முன்னாள் ராணுவத்தினா் அங்காடி பொறுப்பாளரிடம் வாக்குவாதம் செய்து கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையா் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆணையா் மணிகண்டன் அங்காடி பொறுப்பாளா்களிடம் பேசி பொருள்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டாா். அதன்பேரில் ராணுவத்தினருக்கு பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு பொதுமுடக்க கட்டுபாடுகளின் படி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT