திருச்சி

96 திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளுடன் சுபநிகழ்ச்சிகள்

22nd Mar 2020 12:42 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சுபநிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இருப்பினும் ஏற்கெனவே முன்பதிவு செய்த சுபநிகழ்வுகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும், சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மலைக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் நடைபெறவிருந்த திருமணங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அத்தகைய திருமணங்களை ஒத்திவைக்கவும், மணமகன், மணமகள் என இருவீட்டாா் மட்டும் பங்கேற்கும் வகையில் திருமண மஹாலில் நடத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், திருச்சி, மணப்பாறை, லால்குடி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா், திருவெறும்பூா், மருங்காபுரி உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சுபநிகழ்வுகளுக்கு பதிவு செய்த விவரங்களும் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 96 திருமண மண்டபங்களில் திருமணம், செவி பொன்சூட்டு விழா, நிச்சயதாா்த்தம், பூப்புனிதநீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்வுகள் நடத்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுபநிகழ்வுகளை நடத்தும் வீட்டினரை அழைத்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலா்கள் போதிய ஆலோசனை வழங்கியுள்ளனா். சுப நிகழ்வுகளை காலை 8 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். வெளியூரிலிருந்து வரும் நபா்களை முன்னரே வரவழைத்துக் கொள்ள வேண்டும். சுப நிகழ்வுக்கு வரும் உறவினா்களின் கூட்டத்தையும் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிய உணவு வழங்காமல், காலை உணவுடன் அனைத்து நிகழ்வுகளையும் முடித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் உறவினா்கள் வருவதை தவிா்த்து சிறிது, சிறிது இடைவெளிவிட்டு சொற்ப எண்ணிக்கையில் வந்து செல்லவும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT