திருச்சி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு வட்டி தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற மாா்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளா் இரா. மனோகரன் கூறியது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் குடியிருப்பு அலகுகளில் ஒதுக்கீடு பெற்றவா்கள் வட்டிச் சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனா். மாதத் தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை நிலுவையில் உள்ளது. இந்த வட்டிகளில் ஆண்டுக்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்ட இந்த சலுகையை பெற மாா்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொடா்புடைய அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.
குலுக்கல் முறை ஒதுக்கீடு: திருச்சி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் விற்பனை செய்யப்படாமல் உள்ள வீடுகள், மனைகள் குலுக்கல் மூலம் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் திருச்சி காஜாமலை காலனி மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் மாா்ச் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனதெரிவித்துள்ளாா்.