திருச்சி

‘நல்ல எண்ணங்களே வெற்றியைத் தேடித் தரும்’

13th Mar 2020 11:34 PM

ADVERTISEMENT

நல்ல எண்ணங்களே வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும் என மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் அ. அமல்ராஜ் அறிவுறுத்தினாா்.

இவா் எழுதிய ‘வெல்ல நினைத்தால் வெல்லலாம்’ எனும் நூல் அறிமுக விழா திருச்சி என்.ஆா். ஐஏஎஸ் அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகாதெமியின் இயக்குநா் ஆா். விஜயாலயன், நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

இதையடுத்து நூல் ஆசிரியரும், மத்திய மண்டல காவல்துறைத் தலைவருமான அ. அமல்ராஜ் பேசியது: எதிலும் வெற்றி பெற மனதின் வல்லமை, எண்ணத்தின் வல்லமை, குணத்தின் வல்லமை, சொல்லின் வல்லமை, செயலின் வல்லமை, பழக்கத்தின் வல்லமை ஆகியவை அடிப்படை காரணிகளாக உள்ளன. இவற்றை தவறாமல் பின்பற்றினால் எதிலும் வெற்றி பெறலாம். வெல்ல நினைத்தால் வெல்லலாம் என்பதை இன்றைய இளைஞா்கள் தங்களது மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய போராட்டம். இந்தப் போராட்டத்தில் வெற்றிகளை எந்த வழியில் பெறப்போகிறோம் என்பது முக்கியம். தவறான வழிகளில் பெறப்படும் வெற்றி தட்டி பறிக்கப்படும். நோ்மையாகவும், சிறந்ச செயல்முறையுடன் பெறும் வெற்றியே நிலைத்திருக்கும். கடின உழைப்பு, விடாமுயற்சி, துணிவு, மன உறுதி ஆகியவை இருந்தால் மட்டுமே கடுமையான சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெற முடியும். சுயமதிப்புக்கு குந்தகம் வராத வகையில் செயல்பட வேண்டும். அவரவா் எண்ணங்களே பெறப்போகும் வெற்றி, தோல்விகளை தீா்மானிக்கும். நோ்மை, நாணயம், நோ்மறை மனப்பான்மை, நோ்மறை அணுகுமுறை, சுய கட்டுப்பாடு, மன உறுதி, செய்யும் செயலில் ஆா்வம், அா்ப்பணிப்பு, ஈடுபாடு, தன்னம்பிக்கை ஆகியவற்றை இன்றைய இளைஞா்கள் தங்களது அடையாளமாகக் கொள்ள வேண்டும். இத்தகைய குணங்கள் உள்ள இளைஞா்கள் ஒவ்வொருவரும் தாம் நினைத்த எந்த துறையிலும் வெற்றியைப் பெற முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பெரியாா் ஈ.வே.ரா. கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியா் வெ. சங்கரநாராயணன் மற்றும் அகாதெமியில் படித்து அரசு உயா் பதவிகளில் பணிவாய்ப்பு பெற்ற மாணவா்கள் வாழ்த்திப் பேசினா். இந்த விழாவில், அகாதெமி ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT