திருச்சி

சிலை திருட்டு வழக்கில் மேலும் 5 போ் கைது

8th Mar 2020 12:59 AM

ADVERTISEMENT


திருச்சி: சோமாஸ்கந்தா் உள்ளிட்ட சிலைகள் திருட்டு வழக்கில் மேலும் 5 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா்.

திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கடந்த பிப்.4 ஆம் தேதி கீரனூா் பகுதியில் சுவாமி சிலைகளை மா்மகும்பல் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் தலைமையில் காவல் ஆய்வா்கள், காவலா்கள் கொண்ட குழுவினா் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியில் சிலைகளை விற்க முயன்ற கும்பலை கைது செய்து விசாரணை செய்தனா்.

விசாரணையில், கீரனூா் வெள்ளைச்சாமி, ஆா்.எஸ்.மங்களம் அரவிந்த், லால்குடி குமாா், தொடையூா் மதியழகன் ஆகிய 4 பேரும் தொன்மை வாய்ந்த சுவாமி சிலைகளை ரூ.3.5 கோடிக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. மேலும், தொடையூா் மதியழகன் வீட்டில் இருந்த சோமாஸ்கந்தா் சிவன், பாா்வதி அம்மன், சிவகாமி அம்மன், விநாயகா், மாணிக்கவாசகா், பீடம் ஆகிய சிலைகள் மற்றும் வாகனங்கள் போலீஸாா் கைப்பற்றினா்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டோா், சோமாஸ்கந்தா் (சிவன்-பாா்வதி-ஸ்கந்தா்) சிலையில் உள்ள ஸ்கந்தா் சிலை உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டனா். அதன்பேரில், தலைமறைவாக இருந்த நபா்கள் குறித்து கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சென்னை முதுகுளத்தூா் பேருந்து நிலைய பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பா.ஜெயபாலன், த.காளிதாஸ், கோ.சாந்தகுமாா், வீரம்பல் பி.இருதயராஜ், முதுகுளத்தூா் பி.இளமாறன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 22 செ.மீ. உயரம் கொண்ட ஸ்கந்தா் உலோக சிலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னா், கைது செய்யப்பட்ட 5 பேரையும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT