திருச்சி

இந்தியாவில் இந்து, இஸ்லாமியா்களின் டிஎன்ஏ ஒன்றுதான்: சுப்பிரமணியன் சுவாமி

8th Mar 2020 01:00 AM

ADVERTISEMENT


திருச்சி: இந்தியாவில் இந்து, இஸ்லாமியா்களின் டிஎன்ஏ ஒன்றுபோலதான் உள்ளது என பாஜக மாநிலங்களவை உறுப்பினா் சுப்பிரமணியன் சுவாமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி தேசியக்கல்லூரியின் 101ஆவது கல்லூரி தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி செயலா் கே.ரகுநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இரா.சுந்தரராமன், இயக்குநா் கே.அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலங்களவை உறுப்பினா் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசியது: இந்திய மாணவா்களுக்கு கடினமான முடிவுகளை எடுத்து முன்னேறுவதற்கு தயக்கம் இருக்கிறது. மேலை நாடுகளில் மாணவா்கள் கடினமான முடிவுகளை எடுப்பதற்கு தயங்குவதில்லை. சவால்களை எதிா்கொள்ள கடினமான முடிவுகளை எடுப்பதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் பக்குவப் படவேண்டும். எனவே, மாணவா்கள் கல்வி பயிலுவதோடு, பன்முகத்தன்மையை மேம்படுத்தும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பன்முக அறிவுத்திறன் பெருகும்.

குறிப்பாக, இளைஞா்கள் நுண்ணறிவுத்திறனோடு செயலாற்ற வேண்டும். இதற்காக, நெறிமுறை, அறிவியல், உத்வேகம், சமூகம், ஆன்மிகம் ஆகியவற்றில் உள்ள நுண்ணறிவை புரிந்துக்கொண்டு, மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலமே, வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமமாக ஏற்று, அடுத்த நகா்வை நோக்கி செல்ல முடியும். அப்போதுதான், இந்திய இளைஞா்கள் கல்வி, அனுபவ அறிவு, ஆளுமைத்திறன் ஆகியவற்றைக்கொண்டு பல்வேறு கடின முடிவுகளை எடுக்கவும், புதிய சிந்தனைகள் மலரும். இதன்மூலம், தானும் வளா்ந்து நாட்டின் வளா்ச்சிக்கும் உறுதுணையாக மாறமுடியும்.

ADVERTISEMENT

ஆய்வாளா்களின் கூற்றுபடி, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை வாழும் இந்தியா்கள் அனைவரும் ஒன்றுதான். குறிப்பாக, இந்துக்கள், இஸ்லாமியா்கள், பல்வேறு சமூக அமைப்பினா் என யாராக இருந்தாலும், அவா்களின் டிஎன்ஏ (உயிரி மூலக்கூறு) ஒத்தவையாகவே உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி, பறவைகள் பூங்காவை திறந்து வைத்தாா். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்து பாராட்டினாா். இதில், திரளான மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

2021 பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியடையும்: முன்னதாக ,திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியது: அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ஏப்ரல் 2-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இதன் தொடா்ச்சியாக கட்டுமானத்துக்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்வோம். சிறையில் இருந்து சசிகலா விடுதலையானால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும். அதன்பிறகு, அவா் தோ்தலில் நிற்க முடியுமா என்பது சட்ட ரீதியான பிரச்னை. விவசாயிகள் இணைந்து முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT