நாசாவில் நடைபெறும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவி தோ்வாகியுள்ளாா். அவரது பயணச் செலவுக்காக ரூ.75 ஆயிரத்தை ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை அளித்தாா்.
திருச்சி மாவட்டம், உறையூா் பாத்திமாநகரைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் பாலசுப்பிரமணியன் மகள் காயத்ரி (21). இவரது தாய் உஷா, தனியாா் பள்ளியில் பயிற்றுநராக உள்ளாா்.
சமயபுரத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இசிஇ இறுதியாண்டு பயிலும் காயத்ரிக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கு அடித்தளமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கோ டூ குரு எனும் ஆன்லைன் தோ்வு. இத்தோ்வில் சிறந்த திறனாளா் என்ற தகுதியை பெற்றாா் காயத்ரி. கிரேடு அடிப்படையில் இத் தோ்வில் அவருக்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்கு தோ்வாகியுள்ளாா். அதோடுமட்டுமின்றி, நாசாவில் நடைபெறவுள்ள விண்வெளி அறிவியல் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளாா். இம்மாநாட்டில் இடம்பெறும் சா்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் பங்கேற்கிறாா். இத் தோ்வில் வெற்றி பெற்றால், புளோரிடா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு பயிலும் வாய்ப்பை பெறமுடியும். இதற்கான கல்விக் கட்டணம் முழுவதும் நாசா விண்வளி ஆய்வு மையமே செலுத்தும். இத்தகைய வாய்ப்புக்காக காத்திருந்த காயத்ரிக்கு அதுகைகூடி வந்துள்ளது. ஆனால், நாசா சென்று வருவதற்கான செலவுக்கு உதவி கிடைக்குமா என்று காத்திருந்தவருக்கு, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உதவிக்கரம் நீட்டியுள்ளாா். திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு மூலம் ரூ.75 ஆயிரத்தை, காயத்ரியின் பயணச் செலவுக்கு அளித்துள்ளாா். இருப்பினும், நாசா சென்றுவர மொத்தம் ரூ.2 லட்சம் செலவாகும் என்கிறாா் காயத்ரி. இதற்காக மேலும், சிலா் உதவினால் தனது கனவு நினைவாகும் என்றாா்.
உதவித் தொகை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தனது மகளின் கனவை நிறைவேற்ற என்னால் முடிந்த அளவு முயன்று முழுத் தொகையையும் தயாா் செய்து காயத்ரியை நாசாவுக்கு அனுப்புவேன் என்கிறாா் அவரது தந்தை பாலசுப்பிரமணியன்.