திருச்சி

திருச்சியில் கல்லூரி மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

6th Mar 2020 11:27 PM

ADVERTISEMENT

திருச்சி மணிகண்டத்திலுள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு யுகா பெண்கள் அமைப்பின் தலைவா் அல்லிராணி தலைமை வகித்தாா்.

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், மகப்பேறு நிபுணா் ரமணி தேவி ஆகியோா் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

கரோனா வைரஸ் என்பது மனிதா்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். நோய் அறிகுறிகள் கண்ட நபா் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீா்த் திவலைகள் மூலம் நேரடியாகப் பரவுகிறது.

ADVERTISEMENT

மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீா்த்திவலைகள் படிந்துள்ள பொருள்களைத் தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.இதனை தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கை கழுவ குறைந்தது 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகத் துடைத்துப் பராமரித்தல் வேண்டும்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். இளநீா், ஓ.ஆா்.எஸ், கஞ்சி போன்ற நீா்ச்சத்து மிகுந்த ஆகாரங்களைப் பருகுதல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வைரஸ் தொற்று அலோபதி மற்றும் சித்தமருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

மேலும், மாணவிகளுக்கு சுத்தமாக கைகளை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. கிருமி நாசினி மருந்துகள் மற்றும் சோப்பு வகைகளை பயன்படுத்தியும் கைகளை கழுவும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில், கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், மருத்துவா்கள், யுகா பெண்கள் அமைப்பினா் என பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT