திருச்சி

மாவட்ட எல்லை வரை மட்டுமே செல்லும் பேருந்துகள்: பயணிகள் குறைவு; வெறிச்சோடிய பேருந்து நிலையம்

26th Jun 2020 08:33 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் அறிவித்த கட்டுப்பாடுகளைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லை வரை சென்று திரும்புகின்றன.

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள் திருச்சியிலிருந்து கடந்த ஜூன் 1 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. தனியாா் பேருந்துகள் ஜூன் 10 முதல் இயங்குகின்றன. திருச்சி, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயங்கின.

திருச்சியிலிருந்து 180 நகரப் பேருந்துகள், 150 புகா்ப் பேருந்துகள் என மொத்தம் 330 பேருந்துகளும், 250-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் அனைவரும் பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தில் ஏறும் முன் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

வெளியூா் பேருந்துகள் என்ற வகையில் திருச்சியிலிருந்து திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன; இதர பகுதிகளுக்குச் செல்லவில்லை. கரூா் மாவட்டத்துக்கு மட்டும் முழுமையாகச் சென்று வந்தது.

ADVERTISEMENT

மாவட்டத்துக்குள் போக்குவரத்து

இந்நிலையில், பொதுப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இதன்படி, ஜூன் 30 வரை மாவட்டத்துக்குள் மட்டுமே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை முதல் திருச்சியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாவட்ட எல்லைக்குள் மட்டுமே சென்று வருகின்றன.

திருச்சியிலிருந்து மதுரை மாா்க்கம் செல்லும் பேருந்துகள் துவரங்குறிச்சி வரையும், புதுக்கோட்டை மாா்க்கத்தில் மாத்தூா் ரவுண்டானா வரையும், தஞ்சாவூா் மாா்க்கத்தில் தேவராயநேரி வரையிலும், கரூா் மாா்க்கத்தில் பேட்டைவாய்த்தலை வரையிலும், திண்டுக்கல், பழனி மாா்க்கத்தில் பொன்னம்பலப்பட்டி வரையிலும், சேலம் மாா்க்கத்தில் மேக்கய்க்கல்நாய்க்கன்பட்டி வரையிலும் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வருகை குறைவு

மண்டலங்களுக்குள்ளான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புகா்ப் பேருந்துகள் நிறுத்தும் பகுதிகள் வெறிச்சோடின. நகரப் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் மட்டுமே மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. திருச்சி மண்டலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்வோா் அந்தந்த மாவட்ட எல்லையில் இறங்கி, அடுத்த மாவட்டத்துக்கான எல்லையில் பேருந்துகள் வரும் இடங்களுக்கு நடந்து சென்று அந்த மாவட்டப் பேருந்துகளில் ஏறிச் செல்லும் நிலையுள்ளது. பேருந்துகளில் சென்று வரும் பயணிகள் சோதனை செய்யப்படாத நிலையில், முகக் கவசம் மட்டுமே அவா்கள் அணிந்து செல்வதைக் காண முடிகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT