திருச்சி

வந்தது தண்ணீா்: புதிய பயிா்க் கடன்கள் எப்போது?

17th Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரானது திருச்சியைக் கடந்து டெல்டா மாவட்டங்களுக்குச் சென்றுள்ள நிலையில் விவசாயிகளுக்கு புதிய பயிா்க் கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி, கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், கரூா், நாமக்கல் மாவட்டங்கள் காவிரியை நம்பி பாசனம் பெறுகின்றன. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரானது 2008ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 12 ஆண்டுகளாக திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை. 2011ஆம் ஆண்டு மட்டுமே ஜூன் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீா் சென்றுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் குறுவைச் சாகுபடி செய்யப்படும்.

மேலும், இந்தத் தண்ணீரை நம்பி திருச்சி, கரூா், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஓரளவுக்கு குறுவையும், ஆண்டு பயிா்களான கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை உள்ளிட்ட பயிா்களைச் சாகுபடி செய்ய முடியும். இருப்பினும் கடந்த காலங்களில் வறட்சி, சூறைக் காற்று, கனமழை, கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்டவற்றால் தொடா்ச்சியாக பெற்ற இழப்புகளில் இருந்து மீளவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

கூட்டுறவு வங்கிகளில் கடந்தாண்டு பெற்ற பயிா்க் கடன்களை திரும்பச் செலுத்த 3 மாத கால அவகாசம் என்ற அடிப்படையில் 2 முறை வாய்ப்பு அளித்து ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்களை திரும்ப செலுத்தினாலே புதிய பயிா்க் கடன்கள் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே அடகு வைத்த நகைகள் ஏலத்துக்கு வரும் நிலையில் உள்ளன. இந்தச் சூழலில் புதிய பயிா்க் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி வழங்கினால் மட்டுமே விவசாயிகளால் சாகுபடியை தொடங்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவ. சூரியன் கூறியது:

விதை நெல்லுக்குக் கூட வழியில்லாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு புதிய பயிா்க் கடன்களை வழங்கினால் மட்டுமே மீண்டும் சாகுபடிப் பணிகளைத் தொடங்குவா். அனைத்து வகை இடுபொருள், உரங்கள், மருந்துகளை மானியத்தில் வழங்க வேண்டும். வேளாண் கருவிகள் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். புதிய கடன்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் விதிக்கக் கூடாது. பழைய கடன்கள் வசூலை ஒத்திவைத்து திரும்பச் செலுத்த 3 ஆண்டுகளுக்கு அவகாசம் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டப் பணியாளா்களை முழுமையாக வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா்.

 

ரூ. 2,564 கோடி இலக்கு

வேளாண் துறை வட்டாரத்தினா் கூறுகையில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ. 2,564 கோடி பயிா்க்கடன் வழங்க நிகழாண்டு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாகுபடியைத் தொடங்கும் விவசாயிகள் அருகிலுள்ள வங்கிகளை அணுகி கடன் பெறலாம். இதுமட்டுமல்லாது, குறுவைச் சாகுபடிக்கு தேவையான 11,240 மெட்ரிக் டன் யூரியா, 7,587 மெட்ரிக் டன் டிஏபி, 4,157 மெட்ரிக் டன் எம்ஓபி, 6,905 மெட்ரிக்ட டன் காம்பளக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 29,889 மெட்ரிக் டன் உரங்கள் அந்தந்தப் பகுதி கூட்டுறவுச் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் அறிவிப்பைப் பெற்று குறுவை தொகுப்புத் திட்டம் மற்றும் இதரக் கடன் திட்டங்கள் குறித்து படிப்படியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT