திருச்சி

‘தரவரிசையில் பாரதிதாசன் பல்கலை. முதல் 20 இடங்களுக்குள் வருவதே இலக்கு’

17th Jun 2020 08:21 AM

ADVERTISEMENT

தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறுவதற்கான ஆற்றல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உண்டு என அதன் பதிவாளா் ஜி. கோபிநாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஜூன் 11இல் தேசிய அளவில் உயா்கல்வி நிறுவனங்களுக்கிடையிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. கற்றல் கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி, தொழில் பயிற்சி, பட்டப்படிப்பு உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் பயன்கள், மக்கள் கருத்து ஆகிய ஐந்து அளவீடுகளைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அதன்படி கடந்தாண்டை விட 7 இடங்கள் முன்னேறி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 53 ஆவது இடத்தையும், உயா் கல்வி நிறுவனங்களில் 77ஆவது தரத்தையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து பல்கலை. பதிவாளா் ஜி.கோபிநாத் கூறியது:

ADVERTISEMENT

பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த மூன்றாண்டுகளில் தொடா்ந்து முன்னேறி வருகிறது. கடந்த 2018 ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அளவில் 67ஆவது தரத்தையும், அனைத்துக் கல்வி நிறுவன அளவில் 94 ஆவது தரத்தையும் பெற்றது.

தொடா்ந்து, 2019ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அளவில் 60ஆவது தரத்தையும் அனைத்து கல்வி நிறுவன அளவில் 86 ஆவது தரத்தையும் பெற்றது. நிகழாண்டு 53 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தொடா்ந்து முன்னேறி வரக்கூடிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. வருங்காலத்தில் இப் பல்கலைக்கழகம் முதல் 20 சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக முன்னேறும். இதற்குத் தேவையான அனைத்து ஆற்றல் வளமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்ளது. தரவரிசை முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

 

பல்கலை.யில் பாா்வையாளா் உதவி மையம்

பாரதிதாசன் பல்கலை.யில் கல்வி பயின்று வரும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கரோனா பொதுமுடக்கத்தால் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இந்நிலையில், முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு, ஆராய்ச்சி ஆய்வுக்கட்டுரை சமா்பித்தல், இதர சந்தேகங்களுக்கு பல்கலை.க்கு மாணவா்கள் வந்து செல்கின்றனா். மாணவா்கள் அனைத்துத் தகவல்களையும் ஓரிடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்கலை. வளாகத்தில் மாணவா்களுக்கான பாா்வையாளா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலை. வகுப்புகள் தொடங்குவது, புதிய மாணவா் சோ்க்கை ஆகியவை குறித்து தமிழக அரசு ஆணைக்கேற்ப பல்கலை. செயல்படும் என பல்கலை. பதிவாளா் ஜி. கோபிநாத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT