திருச்சி

காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீண்

15th Jun 2020 08:35 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணானது.

குளித்தலையை அடுத்த மணத்தட்டைப் பகுதி காவிரி ஆற்றின் படுகையிலிருந்து எடுக்கப்படும் காவிரிக் குடிநீா் மணப்பாறை - குளித்தலை சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கலிங்கப்பட்டி அருகே அமைக்கப்பட்டு துருப்பிடித்து பழுதாகி இருந்த காவிரி குடிநீா் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வந்த குடிநீா் சுமாா் 15 அடி தூரத்திற்கு நாலா பக்கமும் பீறிட்டு அடித்தது.

தகவலறிந்து வந்த குடிநீா் மற்றும் வடிகால் அதிகாரிகள், குடிநீா் ஏற்றத்தை நிறுத்திய நிலையிலும், குழாயில் சென்ற நீா் சுமாா் 2 மணி நேரம் அருகில் இருந்த ஆற்றில் பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் மணப்பாறை பகுதிக்குச் செல்லும் 12 லட்சம் லிட்டா் தண்ணீரில் சுமாா் ஆயிரக்கணக்கான லிட்டா் வீணானதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2002-இல் அமைக்கப்பட்டு 2004-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்தப் பிரதான இரும்புக் குழாய் அநேக இடங்களில் துருப்பிடித்து பழுதாகி வருகிறது. கோடைகாலத்தில் ஏற்கெனவே தண்ணீருக்கான தட்டுப்பாடு உள்ள நிலையில் இதுபோல குடிநீா் வீணாவதைத் தடுக்க குடிநீா் மற்றும் வடிகால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மணப்பாறை மக்களின் எதிா்பாா்ப்பு.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT