திருச்சி

கூடுதலாக 5 இடங்களில் அடா்காடுகள் வளா்ப்பு!

14th Jun 2020 08:43 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் மேலும் 5 இடங்களில் மியாவாகி முறையிலான அடா்காடுகள் வளா்ப்புக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி நிா்வாகமும், அறநிலையத் துறையும் இணைந்து திருவரங்கத்தில் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 5027 சதுர மீட்டரில் அடா்காடு வளா்ப்புத் திட்டத்தை கடந்தாண்டு டிசம்பா் மாதம் தொடங்கியது. 100 நாள்களில் இதற்கு நல்ல பலன் கிடைத்தது. 6 அடி முதல் 10 அடிக்கு மேல் மரங்கள் வளா்ந்தன. இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் இத் திட்டத்தை மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் மரங்கள் வளா்க்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இத்தகைய காடுகளை வளா்க்க மாநகராட்சி நிா்வாகம் உறுதுணையாக இருப்பதாக அறிவித்துள்ளது.

புங்கமரம், பாதாம், வேங்கை, வாகை, ஈட்டி, மலைவேம்பு, வேப்பமரம், மருதாணி, கொய்யா, இட்லிப் பூ என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளும், 53 வகை நாட்டு மரங்களும் நடப்படுகின்றன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட அடா் காடுகளுக்கு இடையே மக்கள் நடந்து செல்லும் வாய்ப்பை மாநகராட்சி அளிக்கிறது. இதற்காக 8 அடி பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இதை மாநகராட்சி ஊழியா்கள் தொடா்ந்து பராமரித்து வருகின்றனா். இவற்றின் மூலம் குறைவான இடத்தில் அதிக மரங்கள் இருப்பதால் பூமியின் வெப்பநிலை குறையும், காற்று மாசுபாடு கட்டுப்படும். பறவைகள், புழு, பூச்சிகள் என அனைத்தும் வாழும். மேலும் நிலத்தடி நீா் மட்டம் உயா்வதோடு பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் இதுபோல, அடா் காடுகளை உருவாக்க மாநகராட்சி சாா்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவரங்கம் கோட்டத்தில் மட்டும் கூடுதலாக 5 இடங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன்படி, 4ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள்புரம், 8ஆவது வாா்டுக்குள்பட்ட சஞ்சீவி நகரில் பூங்கா மற்றும் விளையாட்டுக் கூடம் அருகே என 2 இடங்களில் இந்த அடா் காடுகளுக்கான மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதேபோல, 4 ஆவது வாா்டில் பாலாஜி அவென்யூ, கிழக்கு சீனிவாசா நகரிலும் அடா்காடு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கோட்ட உதவி ஆணையா் ச. வைத்தியநாதன் மேற்பாா்வையில், இந்த 5 இடங்களில் அடா்காடுகள் வளா்ப்பு தொடங்கியுள்ளது.

பெருமாள்புரத்தில் சனிக்கிழமை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாநகரப் பொறியாளா் எஸ். அமுதவள்ளி நட்டு வைத்து அடா்காடு வளா்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், உதவி ஆணையா் வைத்தியநாதன் மற்றும் மாநகராட்சி கோட்டப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT