திருச்சி

குறவன் கலிங்கல் அணைக்கட்டு புனரமைப்பு: ரூ.70 லட்சத்தில் பணிகள் தீவிரம்

11th Jun 2020 12:18 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் குறவன் கலிங்கல் அணைக்கட்டு ரூ.70 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை, திருச்சி மாவட்டத்துக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலருமான ஏ.கார்த்திக், வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், அணைக்கட்டுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரையில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கும் வகையில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பொதுமுடக்கத்தால் இந்த பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பணிகளை தீவிரப்படுத்தவும் டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திருச்சி மாவட்டத்துக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலராக, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருச்சியில் முகாமிட்டு குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதன்படி, துறையூர் வட்டம், கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள குறவன் கலிங்கல் அணைக்கட்டு ரூ.70 லட்சத்தில் புனரமைக்கப்படுகிறது. 

மேலும், தளுகை கிராமத்துக்குள்பட்ட முருங்கைப்பட்டி ஏரியானது ரூ.19 லட்சத்தில் புனரமைக்கப்படுகிறது. ஏரிக்கரையை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் கட்டப்படுகிறது. இந்த பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஏ.கார்த்திக், பணிகள் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்தார். மேலும், அந்தப் பகுதி பாசனதாரர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். வரும் 25ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும். 

இந்த பணிகள் மூலம் 143.60 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பாக அமையும் என்றார். திருச்சி மாவட்டத்தில் மேட்டூர் அணை தண்ணீர் கிளைவாய்க்கால்களுக்கு வருவதற்கு முன்பாக 11 பணிகள் முடிக்கப்படவுள்ளதாகவும், சாகுபடிக்கு பிறகு மீதமுள்ள பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதகாவும் தெரிவித்தார்.  இந்த ஆய்வின்போது, அரியாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரீனா, பொறியாளர்கள் தங்கையன், ஜெயராமன் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : trichy tamiladu dam புனரமைப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT