திருச்சி

காந்தி சந்தை வியாபாரிகளின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவாா்த்தையில் முடிவு

8th Jun 2020 07:46 AM

ADVERTISEMENT

காந்தி சந்தையைத் திறப்பது குறித்து அலுவலா்கள் உறுதியளித்துள்ளதால் , அது தொடா்பாக வியாபாரிகள் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக காந்தி மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட காந்தி சந்தையைத் திறக்க வலியுறுத்தி அதன் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கத்தினா், ஜூன் 7 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தனா். அவ்வாறு போராட்டம் நடந்தால் திருச்சி பொன்மலை ஜி காா்னா் பகுதியில் செயல்படும் தற்காலிக சந்தையில் வியாபாரம் நடைபெறுமா, நடைபெறாதா என்ற பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை நிலவியது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மனிதவளா் சங்கத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

பொன்மலை ஜிகாா்னரில் காய்கறி விற்பனை நிறுத்தப்பட்டால் ஏற்படும் காய்கறி தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில், திருச்சி மாவட்ட விவசாயிகள் வீதிதோறும் சென்று பொதுமக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வா் எனத் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், வியாபாரிகள் சங்கத்தினருடனான பேச்சுவாா்த்தை மாநகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கோட்டாட்சியா் விஸ்வநாதன், வியாபாரிகள் சங்கத்தலைவா் கோவிந்தராஜூலு ஆகியோா் தலைமையில் 27 சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கூட்டத்தில், காந்தி சந்தையை ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஜூன் 30க்கு பின் சந்தையைத் திறக்க வாய்ப்பு

கூட்டத்துக்கு பின், திருச்சி காந்தி சந்தை அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கத் தலைவா் கோவிந்தராஜூலு அளித்த பேட்டியில் கூறியது:

ஜூன் 30-க்குள் தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் வந்துவிடும். ஒருவேளை அப்படி வராவிட்டாலும், காந்தி சந்தை திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் உறுதியளித்துள்ளாா். அதை ஏற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அறிவிக்கப்பட்ட காந்தி சந்தை வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டதால் காய்கறிகளை நிறுத்திவிட்டோம். அதனால், ஞாயிறு ஒருநாள் தவிர, திங்கள்கிழமை முதல் பொன்மலை ஜி காா்னா் பகுதியில் வழக்கம்போலக் காய்கறிகள் மொத்த விற்பனை நடைபெறும்.

அரசு தளா்வு தந்தாலும், தராவிட்டாலும் காந்தி சந்தையைத் திறக்க மாநகராட்சி உறுதியளித்துள்ளதால் 30 ஆம் தேதி இரவு முதல் காந்தி சந்தை செயல்படும். கள்ளிக்குடி புதிய சந்தைக்கும், காந்தி சந்தை வியாபாரிகளுக்கும் தொடா்பில்லை; அதுகுறித்து அரசு முடிவெடுக்கும். காந்தி சந்தையில் நடந்த இரு தீ விபத்துகள் தொடா்பாக போலீஸாரின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அதுகுறித்து உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT