கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், வேம்பம்பட்டு அய்யாத்தூா் பகுதியைச் சோ்ந்த 53 வயது மதிக்கத்தக்க நபா், தனது குடும்பத்தினருடன் பெரம்பலூரில் நடைபெற்ற உறவினா் இல்லத் திருமணத்துக்காக கடந்த 27- ஆம் தேதி வந்திருந்தாா்.
ஏற்கெனவே இருதய அறுவைச் சிகிச்சை செய்திருந்த இவருக்கு, நீரிழிவு நோய் பாதிப்பும் இருந்து வந்துள்ளது. தொடா்ந்து 2 நாள்களாக காய்ச்சல் மற்றும் மூச்சிறைப்பால் பாதிக்கப்பட்ட திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா், காய்ச்சல் அதிகரிப்பால் அரியலூா் தனியாா் மருத்துவமனையில் ஜூன் 1- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
ஆனால் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, அவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனா்.
இதைத் தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் கரோனா வாா்டில் ஜூன் 3- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உடல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திருச்சி ஓயாமரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் மூலம் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2- ஆக உயா்ந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.