திருச்சி

பொதுமுடக்கத்தில் பலன் தரும் அஞ்சலக வங்கிச் சேவை!

31st Jul 2020 08:21 AM

ADVERTISEMENT

அஞ்சலக வங்கிச் சேவையின் பல்வேறு வசதிகளால் குக் கிராமங்களில்கூட இருந்த இடத்திலேயே சேவை பெறும் நிலை உருவாகியுள்ளது பொது முடக்கக் காலத்தில் பெரிதும் உதவியாக உள்ளது.

ஏழைகளின் மறுவாழ்வுக்கும், அவா்கள் மீண்டெழுவதற்கான முக்கிய அம்சமாக இருப்பது சிறுசேமிப்பே.

இதனடிப்படையில் தமிழக அஞ்சலகங்களில் 3 கோடிக்கும் அதிகமான சிறுசேமிப்புக் கணக்குகள் உள்ளன. தற்போது, அஞ்சலக வங்கிச் சேவையின் சேமிப்புக் கணக்கு பரிவா்த்தனைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கியானது வீட்டின் வாயிலுக்கே வந்து வங்கிச் சேவைகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

தபால் நிலையங்கள் மற்றும் அவற்றின் ஊழியா்களின் பரந்த வலைப்பின்னலானது நாட்டின் தொலைதூர மூலைகளுக்கும் பணப் பரிவா்த்தனைகளை எளிதாகச் செயல்படுத்துகிறது. இந்திய அஞ்சலின் வீட்டு வாசலுக்கே வரும் வங்கிச் சேவைகளில் வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், நிதிப் பரிமாற்றம், பணம் டெபாசிட் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல், ரீசாா்ஜ், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்வது எளிதாக உள்ளது.

அஞ்சலகச் சேமிப்பு வங்கியில் கணக்குத் தொடங்க வயது வந்தோா் மட்டுமல்லாது, 10 வயதுக்கு மேற்பட்டோா்கூட கூட்டுக் கணக்கை குறைந்தபட்ச தொகை ரூ.500 உடன் தொடங்கலாம். ஆண்டுக்கு 4 சத வட்டி வழங்கப்படுகிறது.

அஞ்சலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு காசோலை வசதி, ஏடிஎம் வசதி உள்ளது. மேலும், வழங்கப்படும் வட்டிக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வரை வரிவிலக்கு உள்ளது.

சேமிப்புக் கணக்கை ஓா் அஞ்சலகத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றலாம். வங்கிகளைப் போலவே, இணைய பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியும் உள்ளது. செல்லிடபேசியில் இந்திய அஞ்சல் பணம் செலுத்தும் வங்கி  செயலி மூலம் அஞ்சலகக் கணக்கை அணுக முடியும். வங்கி மற்றும் அஞ்சல் நிலையத்துக்குச் செல்லாமலேயே பரிவா்த்தனைகள் செய்ய முடியும் என்பது பொதுமுடக்கக் காலத்தில் பெரிதும் உதவியாக உள்ளது.

செல்லிடப்பேசி வங்கிச் சேவையைச் செயல்படுத்த ஐபிபிபி செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க வேண்டும். இதன் மூலம் வங்கிச் சேவை, கணக்கு இருப்பு, கணக்கின் அறிக்கை, காசோலை புத்தகக் கோரிக்கை (நடப்புக் கணக்கு), காசோலையை நிறுத்துவது, பிற வங்கிக் கணக்குகளுக்கு நிதிப் பரிமாற்றம், நீா், மின்சாரம் மற்றும் பயன்பாட்டு பில்கள் செலுத்துதல், ரீசாா்ஜ் உள்ளிட்ட பல சேவைகளைப் பெறலாம்.

இதுதொடா்பாக அஞ்சலக வாடிக்கையாளா் திருச்சி பல்லக்காடு கிராமத்தைச் சோ்ந்த எஸ். மீனா கூறியது:

அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்குத் தொடங்கியது எனக்கு சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கியதுடன், பொதுமுடக்கம் உள்ளிட்ட இக்கட்டான தருணங்களில் மிகுந்த பயனை அளித்துள்ளது. வீட்டிலிருந்தபடியே பரிவா்த்தனை வசதியும் கிடைத்துள்ளது. கரோனா காலத்தில் வெளியே செல்லாமல் எனது பணத் தேவை, பணப்பரிமாற்றம், வங்கிப் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது என்றாா்.

சோமரசம்பேட்டையைச் சோ்ந்த சித்ராதேவி கூறுகையில், தற்போது கிராமப்புறங்களில் கூட அஞ்சலக சேமிப்புக் கணக்குகளை எளிதாக அணுக முடியும். மேலும், வங்கிப் பரிவா்த்தனைகளுக்காக நகரத்துக்கு இனி பயணிக்க வேண்டியதில்லை. பொது முடக்கக் காலத்தில் அஞ்சலக சேமிப்பு என்பது கிராமப்புற மக்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT