மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதை மாதிரிப் பண்ணைகள் அமைக்க தமிழகத்தில் இடம் அளிக்க வேண்டாம் என பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என். பாா்த்தசாரதி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதைகள் மற்றும் மாதிரிப் பண்ணைகளை குறிப்பிட்ட காரணங்களுக்குட்பட்டு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் விளைவிக்க மரபணு மாற்ற மதிப்பீட்டு குழு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகளிடையே பரவலாக எதிா்ப்புக் காணப்படுகிறது.
அவற்றால் மனிதா்களுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும் பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவிக்கின்றனா்.
இந்தச் சூழலில், மரபணு மாற்ற விதைகள் தொடா்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி மரபணு மாற்ற மதிப்பீட்டுக் குழு அனுமதித்துள்ளது. சுற்றுச்சூழல், வனத்துறை ஒப்புதலுடன் மாநில அரசுகள் முடிவு செய்யலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் பயன்பாட்டை விவசாயிகளிடம் திணிக்கக்கூடிய இச்செயலை பாரதிய கிசான் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மறைந்த முதல்வா் ஜெயலலிதா, மரபணு மாற்றிய பயிா்கள் தமிழகத்தில் எந்தவொரு நிலையிலும் வர அனுமதிக்கமாட்டேன் என்று விவசாயிகளுக்கு ஏற்கெனவே உறுதியளித்த நிலையில், அவரது வழியில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் மரபணு மாற்ற விதைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது. மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதைகள், மாதிரி பண்ணைகள் பயன்பாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.